“எங்கு விளையாடினாலும்.. இந்த பையன் மிரட்டுகிறார்..” - சூர்யவன்ஷியை பார்த்து மிரண்ட ஆஸ்திரேலியா வீரர்
14 வயது இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, யு19 உலகக்கோப்பையில் 175 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்சின் பாராட்டைப் பெற்றுள்ளார். இளம் வயதில் டி20 சதம் அடித்த சூர்யவன்ஷி, உலக கிரிக்கெட்டில் மிரட்டும் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
14 வயதில் உலக கிரிக்கெட்டையே மிரட்டிவருகிறார் குட்டி ராட்சசன் வைபவ் சூர்யவன்ஷி. 13 வயதில் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டது முதல், 14 வயதில் ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகி முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிட்டு இளம் வயதில் டி20 சதமடித்தது வரை ஆச்சரியத்தின் மறுஉருவமாக இருந்துவருகிறார் இந்தியாவின் சூர்யவன்ஷி.
யு19 கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை குவித்துவரும் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை பார்த்தவர்கள் எல்லாம் ’This Guy Unreal’ என்றே ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் யு19 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை பார்த்துவரும் முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், சூர்யவன்ஷியை பாராட்டி பேசியுள்ளார்.
எந்த இடமாக இருந்தாலும் மிரட்டுகிறார்..
2026 யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஃபிஞ்ச், ”இந்த இளம் வீரர் வியாபவ் சூரியவன்ஷி எங்கு விளையாடினாலும் சரி, அங்கெல்லாம் ஆதிக்கம் செலுத்துகிறார்.. இந்த U/19 WC உலக கிரிக்கெட்டில் தற்போது எவ்வளவு திறமைகள் வெளிப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. ஃபைசல், நியாசல் மற்றும் ரெவ் ஆகியோர் சில அற்புதமான சதங்களை அடித்துள்ளனர்” என பதிவிட்டுள்ளார்.
இந்தசூழலில் அவர் பதிவிட்ட பிறகு நடந்துவரும் யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 80 பந்தில் 15 சிக்சர்கள் 15 பவுண்டரிகள் உடன் 175 ரன்களை குவித்துள்ளார் சூர்யவன்ஷி. மேலும் யு19 கிரிக்கெட் வரலாற்றில் 71 பந்தில் அதிவேகமாக 150 ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

