’இதுக்கு ஏன் டீம்ல எடுக்குறீங்க..?’ ஏமாற்றிய கவுதம் கம்பீர்.. சிஎஸ்கே ரசிகர்கள் வேதனை!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஜுன் 20 முதல் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரோகித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் டெஸ்ட் வடிவத்திலிருந்து ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியே பலம்வாய்ந்த இங்கிலாந்தை அவர்களின் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.
இத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்துக்கு வந்த இந்தியா ஏ அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடியது. இதில் கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், ஹர்சித் ரானா, ருதுராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான் முதலியோர் பங்கேற்ற நிலையில், அவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்துவந்தது.
இந்தியா ஏ அணி பங்கேற்ற 2 போட்டிகள் கொண்ட தொடர் முடிவுக்கு வந்த நிலையில், அதிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ரானா இந்திய அணியில் கடைசி வீரராக இடம்பிடித்துள்ளார். இந்திய அணி மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் இந்த தேர்வு இணையத்தில் ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.
அன்ஷுல் கம்போஜ் தான் அணியில் இடம்பிடித்திருக்க வேண்டும்..
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சிஎஸ்கே வீரரான அன்ஷுல் கம்போஜ் 26 சராசரியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். அதுமட்டுமில்லாமல் புதிய பந்திலெயே விக்கெட்டை வீழ்த்தி சிறந்த தொடக்கத்தை கொடுத்திருந்தார்.
அவருடைய பந்துவீச்சை பார்த்த ரசிகர்கள் அன்ஷுல் கம்போஜ்க்கு இந்திய அணியில் நிச்சயம் இடம் கிடைக்கும், அவர் புதிய பந்தில் தொடக்கத்திலேயே விக்கெட்டை வீழ்த்துகிறார் என்று கூறிவந்தனர்.
ஆனால் முடிவில் அவரை எடுக்காமல் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி ரன்களை வாரிக்கொடுத்த ஹர்சித் ரானா இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இது இணையத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது.
பல சிஎஸ்கே ரசிகர்கள் சிறப்பாக செயல்பட்ட சிஎஸ்கே வீரர் அன்ஷுல் கம்போஜை அணியில் எடுக்காமல், கேகேஆர் அணி வீரரான ஹர்சித் ரானாவை எடுத்திருப்பது முழுக்க முழுக்க சொந்த விருப்பில் எடுக்கப்பட்டப்பட்டிருக்கும் முடிவு என்றும், சிஎஸ்கே வீரர் என்பதால் அன்ஷுல் கம்போஜ் இடம்பெறவில்லை என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.