”உடனே காயம்னு சொல்லிடுவீங்களே!”- கே.எல்.ராகுல் சேர்ப்பு, ஸ்ரேயாஸ் ஓய்வு குறித்து விளாசும் ரசிகர்கள்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையிலான ஆசியக்கோப்பை போட்டியில் இந்தியாவின் பிளேயிங் லெவனில் கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டிருப்பது ரசிகர்களால் விமர்சனம் செய்யப்பட்டுவருகிறது.
Shreyas - KL Rahul
Shreyas - KL RahulTwitter

2023 ஆசியக்கோப்பை தொடரானது ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் நடந்துவருகிறது. தற்போது சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடந்துவரும் நிலையில், இன்றைய பெரிய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகளும் எதிர்வரும் 2023 ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லக்கூடிய அணிகளாக பார்க்கப்படும் நிலையில், இரண்டு அணிகளின் மோதலானது அதிகப்படியான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ind vs pak
ind vs pak

கடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தங்களுடைய அபாரமான ஃபாஸ்ட் பவுலிங் அட்டாக்கால் இந்திய டாப் ஆர்டர் வீரர்களை திக்குமுக்காட வைத்தது.

இந்நிலையில், இன்று நடைபெறும் இரண்டாவது மோதலில் இந்திய அணி பாகிஸ்தானை எப்படி எதிர்கொண்டு விளையாடபோகிறது என்ற எதிர்ப்பார்ப்பில் போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக கேஎல் ராகுல் சேர்ப்பு!

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பவுலிங்கை தேர்வு செய்தார். அதற்கு பிறகு பேசிய கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியை அறிவித்தார். அந்த அணியில் யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டிருந்தார்.

KL Rahul
KL Rahul

ராகுல் சேர்ப்பு குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, போட்டிக்கு முந்தைய பயிற்சியின் போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகு வலி ஏற்பட்டதாகவும், அதனால் தான் கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்திய ஆடும் அணியில் இரண்டு மாற்றங்களாக முகமது ஷமிக்கு பதிலாக பும்ராவும், ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக கேஎல் ராகுலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இத்தனை மாத ஓய்விற்கு பிறகும் முதுகு வலி என்றால் எதற்காக அவர் அணியில்?

இந்திய அணியின் இந்த திடீர் மாற்றம் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒருவேளை கேஎல் ராகுல் அணிக்குள் இடம்பெற்று விளையாட வேண்டும் என்றால் கூட அப்படியே இணைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் மாறாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகு வலி என்பதால் தான் ராகுல் இணைக்கப்பட்டிருப்பதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணிக்குள் வந்த சில நாட்களிலேயே காயம் ஏற்படுகிறதென்றால், அப்படிப்பட்ட ஒரு வீரரை எப்படி ஒன்றரை மாதங்கள் வரை நடைபெறவிருக்கும் ஒரு உலகக்கோப்பை தொடருக்கு எடுத்துச்செல்வீர்கள் என்ற கேள்வியையும், அதிருப்தியையும் ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

கேஎல் ராகுல் இணைப்பு மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் முதுகுவலி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் ரசிகர் ஒருவர், “கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றி பொய்யான உத்தரவாதத்தில் வைத்திருப்பது BCCI-ன் இயல்பாகவே மாறிவிட்டது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் கேஎல் ராகுலின் இணைப்பு குறித்து பதிவிட்டிருக்கும் ஒருவர், “கேஎல் ராகுலை அணிக்குள் எடுத்துவர வேண்டுமென்றால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிச்சயம் காயம் ஏற்படும்” என பதிவிட்டுள்ளார். இந்திய அணி 17 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களுடன் விளையாடிவருகிறது. சுப்மன் கில் 58 ரன்களிலும், விராட் கோலி 1 ரன்னிலும் விளையாடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com