"பும்ரா பவுலிங் சரியில்லை..” புயலைக் கிளப்பிய இந்திய வீரர்.. பின்னணிக் காரணம் என்ன?
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ராவும் ஒருவர். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது பும்ராவுக்கு இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராஜ் குல்கர்னி, பும்ராவின் பவுலிங்கை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், “பும்ரா இந்தியாவின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. அவர் நமது தங்கமகன். ஆனால், கபில் தேவ், ரிச்சர்ட் ஹாட்லிபோல அவரது பந்துவீச்சு நுட்பம் சரியானதாக இல்லை. அவரது விசித்திரமான பந்துவீச்சு முறை அவரது உடலுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது.
இதனால்தான் அவர் அடிக்கடி காயமடைகிறார். பும்ரா ஐபிஎல், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட விரும்பினாலும், அவரால் அனைத்து வடிவங்களிலும் தொடர்ந்து நீடிக்க முடியாது. எனவே, அணி நிர்வாகம் அவரை மிகவும் முக்கியமான டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். முகமது சிராஜுடன் இணைந்து ஷமி, புவனேஷ்வர் குமார் போன்ற மூத்த வீரர்கள் விளையாடினால் பும்ரா மீதான அழுத்தம் குறையும். புவனேஷ்வரை டி20 போட்டிகளிலும், ஷமி மற்றும் சிராஜை டெஸ்ட் போட்டிகளிலும் சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும்” என அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

