கதறவிட்ட தென்னாப்ரிக்கா அணி! மிக மோசமான தோல்வியை பதிவு செய்த இங்கிலாந்து! சாம்பியனுக்கு என்ன ஆச்சு?

400 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 170 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது.
eng vs sa
eng vs sacricinfo

2019 உலகக்கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக இருந்துவரும் இங்கிலாந்து அணி, இந்த உலகக்கோப்பை தொடரில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த அணியாக இருந்துவரும் தென்னாப்ரிக்காவை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து.

மும்பையின் வான்கடே மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். கடந்த 2 போட்டிகளாக காயத்தால் விளையாடாமல் இருந்துவந்த இங்கிலாந்தின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ், இந்த போட்டியில் களமிறங்கியது இங்கிலாந்துக்கு சாதகமாக பார்க்கப்பட்டது. அதேபோல் தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமாவுக்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டது. அவருக்கு பதில் எய்டன் மார்கரம் தென்னாப்பிரிக்காவை வழிநடத்தினார்.

முதல் உலகக்கோப்பை சதத்தை பதிவு செய்த க்ளாசன்!

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணிக்கு தொடக்கத்திலேயே டிகாக்கை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தது இங்கிலாந்து. ஆனால் அதற்கு பிறகு ஜோடி சேர்ந்த ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் வாண்டர் டஸ்ஸென் இருவரும் அசத்தலான ஆட்டத்தை பதிவுசெய்தனர். சிறப்பாக விளையாடிய இவர்கள் அடுத்தடுத்து அரைசதம் போட 100 ரன்களை கடந்தது தென்னாப்பிரிக்கா. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தவித்து வந்த இங்கிலாந்து அணிக்கு, 8 பவுண்டரிகளுடன் 60 ரன்களில் இருந்த டஸ்ஸெனை வெளியேற்றி விக்கெட்டை எடுத்துவந்தார் அடில் ரஷித். அதுமட்டுமல்லாமல் 9 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த ஹென்ரிக்ஸை 85 ரன்களில் வெளியேற்றிய ரஷித், இங்கிலாந்து அணியை ஆட்டத்திற்குள் எடுத்துவந்தார்.

Heinrich Klaasen
Heinrich Klaasen

ஆனால் அதற்கு பிறகு கைக்கோர்த்த கேப்டன் மார்க்ரம் மற்றும் க்ளாசன் இருவரும் அதிரடியான பேட்டிங் ஆடி ரன்களை எடுத்துவந்தனர். சிறப்பாக செயல்பட்ட இந்த ஜோடியை 44 ரன்களில் மார்கரமை வெளியேற்றியது மட்டுமல்லாமல், அடுத்துவந்த டேவிட் மில்லரையும் டோப்ளே வெளியேற்ற ஆட்டம் சூடுபிடித்தது. 243 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழக்க ஆட்டம் இந்த பக்கமா அந்த பக்கமா என மாறியது. ஆனால் 6வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் போட்ட க்ளாசன் மற்றும் மார்கோ ஜான்சென் இருவரும் வேறு திட்டத்தை வைத்திருந்தனர். ஃப்ரைம் பார்மில் இருந்துவரும் க்ளாசன் முதலில் அதிரடியை தொடங்க, அதை பற்றிக்கொண்ட ஜான்செனும் அவருடைய பங்கிற்கு சிக்சர்களாக பறக்கவிட்டு மிரட்டிவிட்டார். 12 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என துவம்சம் செய்த க்ளாசன் தன்னுடைய முதல் உலகக்கோப்பை சதத்தை பதிவு செய்து அசத்தினார். உடன் 6 சிக்சர்களை பறக்கவிட்டு மாஸ் காட்டிய ஜான்சென் 75 ரன்கள் அடிக்க, 50 ஓவர் முடிவில் 399 ரன்களை குவித்தது தென்னாப்பிரிக்கா அணி.

சீட்டுக்கட்டு போல் சரிந்த இங்கிலாந்து!

400 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில், முதலில் சிக்சர் பவுண்டரியாக விரட்டி பேர்ஸ்டோ காட்டினாலும், அவரை10 ரன்னிலேயே வெளியேற்றினார் லுங்கி இங்கிடி. அதற்கு பிறகு பந்துவீச வந்த மார்கோ ஜான்சென் தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் மற்றும் டேவிட் மலனை சொற்ப ரன்களில் வெளியேற்ற ஆட்டம் கண்டது இங்கிலாந்து அணி. அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா பவுலர்கள் மேலும் அழுத்தம்போட, இங்கிலாந்து வீரர்களுக்கு அழுத்தம் அதிகமானது. இந்நிலையில் ஒரு சிறப்பான பந்தில் 5 ரன்னில் பென் ஸ்டோக்ஸை வெளியேற்றிய ரபாடா, விக்கெட்டுகளின் சரிவை மேலும் அதிகப்படுத்தினார்.

Jos Buttler
Jos Buttler

அவரைத்தொடர்ந்து பந்துவீச வந்த மினி டேல் ஸ்டெய்ன் ஆன ஜெரால்ட் கோட்ஸி, இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் ஹாரி ப்ரூக் இருவரையும் ஒரேஓவரில் வெளியேற்றி இங்கிலாந்தின் தோல்வியை உறுதிசெய்தார். பின்னர் வந்த வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் நடையைக்கட்ட, கடைசியாக வந்த மார்க் வுட் 5 சிக்சர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார். எப்படி இருந்தாலும் முடிவில் 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது இங்கிலாந்து அணி.

தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்கா

4 போட்டிகளில் 3 போட்டியில் தோல்வியை சந்தித்திருக்கும் இங்கிலாந்து அணி, இனி வரும் 5 போட்டிகளில் பெரிய அணிகளான இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் முதலிய அணிகளை எதிர்கொண்டு விளையாடவிருக்கிறது. இந்நிலையில் இனிவரும் போட்டிகளில் எல்லாம் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது இங்கிலாந்து. எதிர்வரும் எதாவது ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தால், நடப்பு உலக சாம்பியன் அணி நடையைக்கட்ட வேண்டியது தான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com