இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், தோல்விபெறக்கூடிய நிலையிலிருந்து தங்களுடைய “பாஸ்பால் அட்டாக்” மூலம் ஒரு வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இங்கிலாந்து அணி.
முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்றபோதும் கூட இந்திய அணியால் வெற்றிபெறமுடியவில்லை. 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்ற இந்திய அணியை சொந்தமண்ணில் வீழ்த்திய முதல் சர்வதேச அணி என்ற சாதனையை இங்கிலாந்து அணி தன்வசமாக்கியுள்ளது.
இந்நிலையில் இரண்டு அணிகளும் மோதக்கூடிய இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2ம் தேதியான நாளை விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ளது. அதற்கான இங்கிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் ஏற்கனவே விராட் கோலி முதலிரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என்ற நிலையில், தற்போது ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் காயத்தால் தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர். இதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இங்கிலாந்து அணி 12 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் தொடரை வெல்ல தீவிரம் காட்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் அணிக்கு கூடுதல் பலம்சேர்க்கக்கூடிய இரண்டு மாற்றங்களை இரண்டாவது போட்டிக்கான அணியில் கொண்டுவந்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட். காயத்தால் வெளியேறிய ஜாக் லீச்சிற்கு பதிலாக இளம் வயது வீரர் சோயப் பஷிர் மற்றும் மூத்த வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருவரும் இடம்பெற்றுள்ளனர்.
முதல் டெஸ்ட் போட்டியில் மார்க் வுட் இடமிருந்து எந்தவித உதவியும் கிடைக்காத நிலையில், அனுபவம் வாய்ந்த ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் சென்றுள்ளார் பென் ஸ்டோக்ஸ். அத்துடன் நல்ல உயரமும், சரியான லெந்தில் தொடர்ச்சியாக பந்துவீசக்கூடிய 20 வயது இளம் ஆஃப் ஸ்ப்பினரான பஷிரையும் அணிக்குள் கொண்டுவந்துள்ளார் ஸ்டோக்ஸ்.
1. சாக் கிராலி
2. பென் டக்கெட்
3. ஒல்லி போப்
4. ஜோ ரூட்
5. ஜானி பேர்ஸ்டோ
6. பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்)
7. பென் ஃபோக்ஸ்
8. ரெஹான் அகமது
9. டாம் ஹார்ட்லி
10. சோயப் பஷீர்
11. ஜேம்ஸ் ஆண்டர்சன்