4வது டெஸ்ட்| 669 ரன்கள் குவித்த இங்கிலாந்து.. 0 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்து இந்தியா பரிதாபம்!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. தொடரை வெல்லும் அணிக்கு முதல் ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை வழங்கப்படும்.
3 போட்டிகள் முடிவில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ள நிலையில், 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்கள் குவித்த நிலையில், தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்கள் குவித்துள்ளது.
பென் ஸ்டோக்ஸ் மிரட்டல் ஆட்டம்..
இந்தியாவை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் தன்னுடைய 38வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து நல்ல நிலைமைக்கு எடுத்துச்சென்றார். அதனைத்தொடர்ந்து களத்திற்கு வந்த பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய 12வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்ய இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 150 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 141 ரன்களும் அடித்தனர்.
இங்கிலாந்து 311 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறிவருகிறது. முதல் ஓவரை வீசிய கிறிஸ் வோக்ஸ் ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் இருவரையும் 0 ரன்னில் வெளியேற்றி அசத்தினார்.