INDvsENG | ஜோ ரூட்டின் சதத்தால் நிமிர்ந்த இங்கிலாந்து.. அறிமுகப் போட்டியில் அசத்திய ஆகாஷ் தீப்!

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்துள்ளது.
ஜோ ரூட், ஆகாஷ் தீப்
ஜோ ரூட், ஆகாஷ் தீப்ட்விட்டர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், 2வது மற்றும் 3வது போட்டிகளில் இந்திய அணியும் வெற்றிபெற்றுள்ளன. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி, இன்று (பிப்.23) ராஞ்சியில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அவ்வணியின் தொடக்க பேட்டர்களாக சாக் கிரெவ்லே மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களமிறங்கினர். இதில் பென் 11 ரன்களிலேயே நடையைக் கட்டினார். ஆனால் சாக், நல்ல தொடக்கம் கொடுத்தார்.

பென்னுக்குப் பிறகு களமிறங்கிய ஆலி பாப்பும் டக் அவுட் முறையில் வீழ்ந்து வந்தவேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். பின்னர் சாக் உடன் இணைந்த ஜோ ரூட் ஓரளவு ரன்களைத் திரட்ட ஆரம்பித்தார். இதில் அதிரடியாக ஆடிய சாக், 42 ரன்களில் வெளியேறினார். தொடக்க பேட்டர்களான இந்த 3 விக்கெட்களையும் இன்றைய போட்டியில் அறிமுகமான ஆகாஷ் தீப் வீழ்த்தி அசத்தினார்.

ஜோ ரூட், ஆகாஷ் தீப்
இங்கிலாந்தை அதிர வைத்த ஆட்டம்... பட்ட கஷ்டங்களை எல்லாம் விக்கெட்களாக அறுவடை செய்யும் ஆகாஷ் தீப்!

இதையடுத்து அனுபவ வீரர் ஜோ ரூட் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட, மறுமுனையில் பேர்ஸ்டோ (38 ரன்கள்), ஸ்டோக்ஸ் (3 ரன்கள்), போக்ஸ் (47 ரன்கள்), ஹார்ட்லி (13 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து ராபின்சன் களம் இறங்கினார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். இந்த தொடரில் அவர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். அதேநேரத்தில் இந்தச் சதம் மூலம் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறினார்.

இந்தியாவுக்கு எதிராக அவர், இதுவரை 10 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். அவர் 226 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அவருக்குத் துணையாக ராபின்சன் 60 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 90 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 3 விக்கெட்களையும், முகமது சிராஜ் 2 விக்கெட்களையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இந்த டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com