ENGvAUS| 165 ரன்கள் விளாசிய டக்கெட்.. 351 ரன்கள் குவித்து வரலாறு படைத்தது இங்கிலாந்து!
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐசிசி தொடர்களில் மோதினாலே அது சரவெடி தான். அந்த வகையில் 2025 சாம்பியன்ஸ் டிராபியின் மிகப்பெரிய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
351 ரன்கள் குவித்த இங்கிலாந்து..
லாகூரில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது. முதல் ஓவரிலேயே சிக்சர்-பவுண்டரி என பிலிப் சால்ட் அதிரடியாக தொடங்க, ஒரு அபாரமான கேட்ச்சை காற்றில் பறந்து பிடித்த அலெக்ஸ் கேரி சால்ட்டை 10 ரன்னில் வெளியேற்றினார். உடன் வந்த ஜேமி ஸ்மித் எதற்கு களத்திற்கு வந்தோம் என தெரியாமலேயே 13 ரன்னில் நடையைக் கட்டினார்.
43 ரன்னுக்கே 2 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து அணி தடுமாற, எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என மற்ற வீரர்களுக்கு ஜோ ரூட் மற்றும் பென் டக்கெட் இருவரும் பாடம் எடுத்தனர். 3வது விக்கெட்டுக்கு 158 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடி, ஆஸ்திரேலியாவின் அனுபவமில்லாத பவுலர்களுக்கு தண்ணி காட்டியது.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஆஸ்திரேலியாவின் ஒரே நம்பிக்கை பவுலரான ஆடம் ஜாம்பா, ஜோ ரூட்டை 68 ரன்னில் வெளியேற்றினார். ஆனால் ஜோ ரூட் வெளியேறினாலும் தொடர்ந்து அதிரடியை நிறுத்தாத பென் டக்கெட் 13 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என நாலாபுறமும் சிதறடித்து சாம்பியன்ஸ் டிராபியின் முதல் சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.
இறுதிவரை அதிரடியை நிறுத்தாத பென் டக்கெட் 17 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 165 ரன்களை குவிக்க, 50 ஓவரில் 351 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. ஆஸ்திரேலியா அணியில் பென் துவார்ஷுயஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
3 வரலாற்று சாதனைகள்..
* அதிகபட்ச ஸ்கோர்: 351 ரன்கள்
2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 351 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி புதிய வரலாறு படைத்தது.
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் 2004-ல் நியூசிலாந்து அடித்த 347/4 என்பதே அதிகபட்ச டோட்டலாக இருந்தது. இந்நிலையில் அதனை முறியடித்து 351/8 ரன்களுடன் சாம்பியன்ஸ் டிராபியில் அதிகபட்ச டோட்டலை குவித்து புதிய வரலாறு படைத்துள்ளது இங்கிலாந்து
* அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்: 165 ரன்கள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 17 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 165 ரன்கள் அடித்த பென் டக்கெட், சாம்பியன்ஸ் டிராபியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை பதிவுசெய்து வரலாறு படைத்தார்.
இதற்குமுன் 2004-ல் நியூசிலாந்து வீரர் நாதன் ஆஸ்லே அடித்த 145* ரன்களே சாதனையாக இருந்தது. அதனை முறியடித்து வரலாற்றை மாற்றி எழுதினார் டக்கெட்.
*அறிமுக போட்டியில் சதம் - பென் டக்கெட்
சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அறிமுக போட்டியிலேயே சதம் விளாசிய பென் டக்கெட், அறிமுக சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சதமடித்த முதல் இங்கிலாந்து வீரராக சாதனை படைத்தார்.