\
England Fast Bowler John Turner Retires From Cricket At 25
ஜான் டர்னர்PTI

ஓராண்டாய் துரத்திய காயம்.. 25 வயதிலேயே இங்கி. கிரிக்கெட் வீரர் எடுத்த அதிரடி முடிவு!

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜான் டர்னர், காயங்களால் அவதிப்பட்டு வந்த நிலையில், தனது 25ஆவது வயதில் தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Published on

இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளராக உருவானவர் ஜான் டர்னர். 25 வயது ஆன இவர், கடந்த 2021 முதல் ஹாம்ப்ஷயர் கவுண்டி அணிக்காக விளையாடி வருகிறார். 2023 உள்நாட்டு டி20 தொடரில் 11 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதன் மூலம், அவருக்கு இங்கிலாந்து தேசிய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, கடந்த 2024ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார். 2 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான எலும்பு முறிவு காரணமாக அவர் எந்த ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. இந்த நிலையில்தான், ஓராண்டுக்கும் மேலாகப் போராடியும் காயம் குணமடையாததால், அவர் தனது கிரிக்கெட் பயணத்திற்கு முடிவுரை எழுதியுள்ளார்.

ஜான் டர்னர்
ஜான் டர்னர்PTI

அனைத்து வகையான தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இவரது இந்த திடீர் முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு குறித்து உருக்கமாகப் பேசியுள்ள ஜான் டர்னர், “இங்கிலாந்து மற்றும் ஹாம்ப்ஷயர் அணிக்காக விளையாடியது எனது சிறுவயது கனவு. ஆனால், முதுகு வலி காரணமாக கடந்த ஓராண்டாக விளையாட முடியாமல் போனது எனது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வைத்தது. இது நான் எடுத்த மிகக் கடினமான முடிவுகளில் ஒன்றாகும்" எனத் தெரிவித்துள்ளார். ஹாம்ப்ஷயர் கவுண்டி ஒப்பந்தத்தில் அவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மீதமுள்ள நிலையில், அவர் இத்தகைய முடிவை எடுத்தது கிரிக்கெட் ரசிகர்களிடம் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பிறந்த டர்னர், எக்ஸெட்டர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் நிதியியல் படித்தவர் ஆவார். கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து இப்போது தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல இருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com