இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆகஸ்டு 21 முதல் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் மோசமான ஃபீல்டிங் காரணமாக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் போட்டியை இழந்தது இலங்கை அணி.
இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலை பெற்றுவரும் நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியானது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்றுமுதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வுசெய்ய இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டை இழந்தாலும், அடுத்துவந்த ஒவ்வொரு வீரருடனும் பார்ட்னர்ஷிப் போட்ட ஜோ ரூட் அபாரமாக விளையாடி தன்னுடைய 33-வது சர்வதேச டெஸ்ட் சதமடித்து அசத்தினார்.
18 பவுண்டரிகளுடன் 143 ரன்களில் ஜோ ரூட் அவுட்டாகி வெளியேற, அவருக்கு பிறகு 8-வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய கஸ் அடிகின்ஸன் அபாரமாக விளையாடி தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்து மிரட்டினார். இது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் சதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
115 பந்துகளில் 14 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 118 ரன்கள் அடித்த கஸ் அட்கின்ஸன் அவுட்டாகி வெளியேற, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 427 ரன்கள் எடுத்துள்ளது. கஸ் அட்கன்ஸனின் அசத்தலான பேட்டிங்கை பார்த்த ஜோ ரூட், "அவருடைய பேட்டிங் அப்படியே தென்னாப்பிரிக்கா ஆல்ரவுண்டர் ஜாம்பவான் ஜாக் காலீஸை பார்ப்பதுபோல் உள்ளது” என புகழ்ந்துள்ளார்.
முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய அஸித்தா பெர்னான்டோ 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். அதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிவரும் இலங்கை அணி 32 ரன்களுக்கு 2 விக்கெட்டை பறிகொடுத்து விளையாடிவருகிறது.