முதல் ODI| 76 ரன்கள் அடித்து அணியை மீட்டெடுத்த ஜோ ரூட்.. இந்தியாவிற்கு 259 ரன்கள் இலக்கு!
பர்மிங்காமில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், நல்ல தொடக்கத்துக்குப் பிறகு இங்கிலாந்து 107 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் சிக்கியது. அப்போது ஜோ ரூட்–லியம் டாசன் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்து அணியை மீட்டெடுத்தது. டாசன் 68 ரன்கள், ரூட் ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் எடுத்ததால், இங்கிலாந்து 47.5 ஓவரில் 258 ரன்கள் சேர்த்தது. இந்தியா 259 ரன்கள் இலக்கை துரத்துகிறது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடர்களில் விளையாடிவருகிறது.
முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 4-0 என இந்தியாவை இங்கிலாந்து தோற்கடித்த நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பர்மிங்காமில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நல்ல தொடக்கத்தை பெற்றபோதும் 80 ரன்களை எட்டுவதற்குள் கொத்து கொத்தாக 5 விக்கெட்டுகளை இழந்தது. 107 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் சரிந்த பிறகு 7வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஜோ ரூட் மற்றும் லியம் டாசன் இருவரும் 121 ரன்கள் பாட்னர்ஷிப் போட்டு அணியை மீட்டு எடுத்துவந்தனர். டாசன் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், கடைசிவரை ஆட்டமிழக்காத ரூட் 76 ரன்கள் அடித்தார். 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து 258 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
259 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்யவிருக்கிறது.

