என்னப்பா போங்கு ஆட்டமா இருக்கு! பேட்டில் பந்துபட்டது க்ளீனா தெரிஞ்சும் மாற்றி அறிவித்த 3வது நடுவர்!

இலங்கை வீரர் வீசிய பந்து வங்கதேச வீரரின் பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தபோதும், மூன்றாவது நடுவர் அவுட் கொடுக்க மறுத்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை வீரர்கள்
இலங்கை வீரர்கள்ட்விட்டர்

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல்கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதல் போட்டியில் இலங்கை 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து 2வது டி20 போட்டி நேற்று சில்ஹெட் பகுதியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக காமிண்டு மெண்டிஸ் 37 ரன்களும், குசல் மெண்டிஸ் 36 ரன்களும் எடுத்தனர். பின்னர் எளிதான இலக்கை நோக்கி வங்கதேச அணி தொடக்க வீரர்களாக சவுமியா சர்க்கார், லின்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் போட்டியின் 3ஆவது ஓவரை பினுரா பெர்னாண்டோ வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சவுமியா சர்கார் எதிர்கொண்டார். அப்போது பந்து அவரது பேட்டில்பட்டு விக்கெட்கீப்பர் கைக்குச் சென்று கேட்ச் ஆனது. இதற்கு உடனே கள நடுவரும் அவுட் கொடுத்துவிட்டார். ஆனால், கள நடுவர் அவுட் கொடுத்த நிலையில், திடீரென ரிவ்யூ எடுத்தார் சவுமியா சர்க்கார். அதில் பந்து பேட்டில் பட்டது தெளிவாகத் தெரிந்தபோதும், மூன்றாவது நடுவர் அவுட் இல்லை என அறிவித்தார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த இலங்கை வீரர்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்களால் மூன்றாவது நடுவரின் முடிவை ஜீரணிக்கவே முடியவில்லை. பெரிய ஸ்கிரீனில் பந்து பேட்டில்பட்டு கிளியராக எட்ஜ்ஜானது தெரிந்தது. ஆனால், மூன்றாவது நடுவர், ’எட்ஜ் இருப்பது தெரிந்தாலும் அது பேட்டில் பட்டதை உறுதிபடுத்த முடியவில்லை’ எனக் கூறி கள நடுவர் அவுட் கொடுத்ததை வாபஸ் பெறுமாறு கூறினார். இதனால், அவுட் என நினைத்து வெளியே சென்ற சவுமியா சர்க்கார் மீண்டும் களத்துக்கு வந்து விளையாடினார். இதுகுறித்து இலங்கை அணி வீரர்கள் எவ்வளவோ கள நடுவரிடம் வாக்குவாதம் செய்தபோதும், அவர்களுக்கு பலன் கிடைக்கவில்லை.

பின்னர் தொடர்ந்து ஆடுமாறு கள நடுவர்கள் எச்சரிக்கை செய்ய, இலங்கை அணி வீரர்கள் வேண்டாவெறுப்பாக அப்போட்டியில் மேற்கொண்டு விளையாடினர். கடைசியில் வங்கதேச அணியானது 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் மூன்றாவது நடுவரால் நாட் அவுட் என வழங்கப்பட்ட சவுமியா சர்க்கார் 26 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தப் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 9ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com