அந்த 2 ரன்னை ஏமாற்றிவிட்டார்கள்? நபியுடன் வாக்குவாதம் செய்த ரோகித்! AFG பக்கம் நின்ற டிராவிட்!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டியானது, குறுகிய வடிவ கிரிக்கெட்டில் காண்பதற்கு ஒரு அற்புதமான போட்டியாக மாறி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் கட்டிப்போட்டது.
ரோகித் - நபி
ரோகித் - நபிX

எதற்காக குறுகிய வடிவ கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் பெரிதளவும் விரும்புகிறார்கள் என்பதற்கு சாட்சியாக, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி அமைந்து எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஒரு போட்டியில் ஒரு சூப்பர் ஓவர் இருந்தாலே அது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிக கொண்டாட்டமான ஒன்று, ஆனால் நேற்றைய போட்டியில் 2 சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் சீட் நுனியில் அமரவைத்து வேடிக்கை காட்டியது.

டி20 போட்டியின் சிறப்பம்சம் என்றால், உங்களால் எந்த இடத்திலிருந்தும் அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்ல முடியும். அதேபோல் நம்முடைய கையில் போட்டியிருக்கிறது எளிதில் வெற்றிபெற்றுவிடுவோம் என்று நினைத்தால், அடுத்த 2 பந்துகளில் எதிரணியின் கையில் போட்டி சென்று உட்காரும். ஆக்ரோசம், வாக்குவாதம், ஏமாற்றம், வெற்றி பெறவேண்டுமென்ற வெறி, அதிருப்தி என அனைத்து எமோசன்களும் ஒரு டி20 போட்டியில் இருந்துவிட்டாலே, அது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமான போட்டியாக மாறிவிடும். அப்படியொரு போட்டியாகத்தான் நேற்றைய இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி அமைந்தது.

ஆப்கானுக்கு சென்ற கூடுதல் 2 ரன்கள்! நபியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரோகித்!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய 3வது டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித் சர்மாவின் அசத்தலான சதம் மற்றும் ரின்கு சிங்கின் 69 ரன்கள் ஆட்டத்தால் 212 ரன்களை பதிவுசெய்தது. எப்படியும் இந்தியாதான் வெற்றிபெறும் என்று நினைத்த போட்டியில், ஆப்கானிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களான குர்பாஸ் மற்றும் இப்ராஹின் ஜத்ரான் இருவரும் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு வெற்றியை ஏற்படுத்திக்கொடுத்தனர். அதை அப்படியே பிடித்துக்கொண்ட நபி மற்றும் குல்பதின் நயப் இருவரும் கடைசிவரை போராட, இறுதிபந்து வரை சென்ற போட்டி டிரா செய்யப்பட்டது.

rohit sharma
rohit sharma

இரண்டு அணிகளும் 212 ரன்களை பதிவுசெய்த நிலையில், போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. அப்போது முதல் சூப்பர் ஓவரில் 5வது பந்தில் சிக்சருக்கு அனுப்பிய முகமது நபி ஆப்கானிஸ்தானை 13 ரன்களுக்கு எடுத்துவந்தார். பின்னர் வீசப்பட்ட கடைசி பந்தை ஒய்டு யார்க்கராக வீசிய முகேஷ் குமார், ஒரு டாட் பந்தாக மாற்றினார். பந்து கீப்பர் கைக்கு செல்ல ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஒரு ரன்னுக்கு சென்றனர். அப்போது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பந்தை ஸ்டம்பை நோக்கி எறிய, அந்த பந்து நேராக சென்று முகமது நபியின் கால்களில் பட்டு லாங் ஆன் ஃபீல்டருக்கு சென்றது. அப்படி பந்து பட்டு சென்றால் பொதுவாக வீரர்கள் அடுத்த ரன்னிற்கு செல்ல மாட்டார்கள். ஆனால் அதை பயன்படுத்திக்கொண்ட ஆப்கான் வீரர்கள் கூடுதலாக 2 ரன்களுக்கு சென்றனர்.

rohit - nabi
rohit - nabi

பந்து நேராக லாங் ஆன் ஃபீல்டரான கோலிக்கு செல்ல, அவர் பந்தை கூட எடுக்காமல் அம்பயரை நோக்கி வீரரின் காலின் பட்டு பந்து சென்றது என சைகை செய்தார். ரோகித் சர்மாவும் எப்படி ரன்கள் ஓடினார்கள் என கோவமாக கத்திக்கொண்டே ஆடுகளத்திற்கு வந்தார். அப்போது அவர் நபியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் பிடிவாதமாக இருந்த நபி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் அவர்களுக்கு 2 கூடுதல் ரன்கள் வழங்கப்பட்டு, இந்தியாவுக்கு வெற்றியாக 17 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த முடிவில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மகிழ்ச்சியாக இருக்கவில்லை.

ஆப்கானிஸ்தான் பக்கம் நின்ற ராகுல் டிராவிட்!

கூடுதலாக வழங்கப்பட்ட 2 ரன்கள் குறித்து ராகுல் டிராவிட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆப்கான் வீரர்கள் செய்தது தவறா என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இல்லை, அதில் எந்த தவறும் பெரிதாய் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. இப்படி நடப்பது விளையாட்டின் ஒரு பகுதி. அத்தகைய ரன்களை ஒரு எதிரணியாக நீங்கள் பெரும்பட்சத்தில் அது உங்களுக்கு வெறுப்பாக இருக்கலாம், ஆனால் அது பரவாயில்லை, விளையாட்டில் இதுவெல்லாம் நடக்கும். இதுபோன்ற ரன்களுக்கு நீங்கள் செல்லலாம்.

இதேபோன்ற ஒரு சம்பவம் முதல் போட்டியிலும் நடந்தது. அது எங்களுடைய பேட்டர்களில் ஒருவரின் பேட்டில் பட்டு பந்து சென்றது, நாங்களும் ஒரு ரன் ஓடினோம். அதுபோன்ற சூழல்களில் கிடைக்கும் ரன்களை ஓடவிடாமல் தடுக்கும் விதிகள் எதுவும் இல்லை என்று நினைக்கிறேன்" என ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆதரவாக தலைமை பயிற்சியாளர் டிராவிட் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com