சொந்த மண்ணில் தோல்வி!-இங்கிலாந்தின் 'BazBall' அணுகுமுறை கைக்கொடுக்கவில்லையா? தோல்விக்கான 5 காரணம்!

இங்கிலாந்து அணியின் பாஸ்பால் அணுகுமுறை சரியான பாதையில் தான் இங்கிலாந்தின் டெஸ்ட் எதிர்காலத்தை நகர்த்தி செல்கிறதா? அல்லது உண்மையில் பாஸ்பால் ஆட்டம் கைக்கொடுக்கவில்லையா? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.
England Bazball
England BazballTwitter

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே புகழ்பெற்ற பாரம்பரியமான ஆஷஸ் தொடரானது பெரிய எதிர்ப்பார்ப்புகளோடு தொடங்கியுள்ளது. நடந்து முடிந்துள்ள முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 2 அணிகளும் சிறப்பாக செயல்பட்டதோடு மட்டுமில்லாமல், மறக்கவே முடியாத ஒரு போட்டியையும் விருந்தாக கொடுத்தார்கள் என்றால் மறுப்பதற்கில்லை. ஆனால் கவாஜாவை வெளியேற்றிய பிறகு கடைசி 3 விக்கெட்டுகளுக்கு 72 ரன்கள் இருந்த நிலையில், நிச்சயம் இங்கிலாந்து அணி தான் வெற்றிபெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதையும் மீறி இங்கிலாந்து அணி போட்டியை கோட்டைவிட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

போட்டியில் வெற்றி அல்லது தோல்வி என ஏதாவது ஒன்று தான் இருக்கவேண்டும், போட்டியில் சமன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற பாஸ்பால் அணுகுமுறை என்பது உண்மையில் ரசிக்கும்படியாக தான் உள்ளது. ஆனால் அது எந்தளவு ஆரோக்கியமான ஒன்றாகவும், எதிர்காலத்தில் இங்கிலாந்தின் கிரிக்கெட்டை வலுப்படுத்தக்கூடியாதாகவும் இருக்கப்போகிறது என்பது உற்றுநோக்க வேண்டியுள்ளது. ஏனெனில் முடிந்த ஆஷஸ் முதல் போட்டியில் இங்கிலாந்தின் அணுகுமுறை என்பது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவே இருந்தது. ‘பாஸ்பால்’ அணுகுமுறை என்ற ஒன்றிற்காக, டெஸ்ட் வடிவத்தின் கிராஃப்ட்டை இங்கிலாந்து தவறவிடுகிறதா என்ற கேள்வி அதிகமாக எழுந்துள்ளது. இதோ இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்ததற்கான 5 காரணங்கள்.

1. பிளாட் பிட்ச்களை விரும்புகிறதா இங்கிலாந்து அணி?

2023ஆம் ஆண்டு ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே இங்கிலாந்து அணி பேட்டிங்கிற்கு சாதகமான பிளாட் பிட்ச்களை விரும்புகிறது என்ற கருத்து பரவலாக பரவியது. ‘பாஸ்பால்’ அணுகுமுறையை விளையாடுவதற்கு பிளாட் பிட்ச்கள் தான் ஏதுவானதாக இருக்கும் என்றும், அதனால் ஆஷஸ் தொடரில் கூட பிளாட்டான ஆடுகளத்தை தான் இங்கிலாந்து வடிவமைக்கப்போவதாகவும் செய்திகள் பரவின. இந்நிலையில் இங்கிலாந்து மைதானங்களின் க்யூரேட்டர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்தனர்.

Edgbaston Pitch
Edgbaston PitchTwitter

ஆனால் மறுத்த போதிலும் முதல் ஆஷஸ் போட்டி நடைபெற்ற எட்ஜ்பாஸ்டன் ஆடுகளமானது பேட்டிங் செய்வதற்கு சாதகமாகவே இருந்தது. மேலும் அதற்கு தகுந்தாற் போல் இங்கிலாந்து அணியும் முதல் நாளிலேயே அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 393 ரன்கள் குவித்து டிக்ளார் செய்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் ஹீலி, “அப்படி அவர்கள் பிளாட்டான ஆடுகளத்தை விரும்பினால் அதுபெரும் ஆபத்தான கோரிக்கையாகவே இருக்கும். ஏனென்றால் மிகச்சிறந்த டெஸ்ட் போட்டிகளை விளையாடியிருக்கும் இங்கிலாந்து அணிக்கு இது சரியானதல்ல. கடந்த 10 வருடங்களில் ஆண்டர்சன் மற்றும் ப்ராட் இருவரும் சேர்ந்து 1000 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இங்கிலாந்தின் இந்த அணுகுமுறை பிற்காலத்தில் பெரிய பாதகமாக அமையும்” என்று கூறியுள்ளார். பிளாட் பிட்ச்சாக இருந்ததாலேயே கடைசி 3 விக்கெட்டுகளுக்கு 72 ரன்கள் இருந்த நிலையிலும் ஆஸ்திரேலிய அணியால் வெற்றிபெற முடிந்தது.

2.முதல் நாளிலேயே டிக்ளார் செய்து தவறு செய்த இங்கிலாந்து!

‘பாஸ்பால்’ அட்டாக்கிங் அணுகுமுறைக்கு ஏற்ப இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் முடிந்தளவு அதிக ரன்களை குவித்துவிடவேண்டும் என்று ஆடிய இங்கிலாந்து அணி முதல்நாளிலேயே 393 ரன்களை குவித்தது. 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 393 ரன்கள் ரன்கள் இருந்த நிலையில், இங்கிலாந்து அணி டிக்ளார் அறிவித்தது ரசிகர்களை மட்டுமல்லாமல் முன்னாள் இங்கிலாந்து வீரர்களை கூட அதிர்ச்சிக்குள்ளாகியது. கெவின் பீட்டர்சன் முதலிய முன்னாள் வீரர்கள் பென் ஸ்டோக்ஸின் இந்த முடிவை விமர்சித்தனர்.

போட்டியில் வெற்றிபெற்றதற்கு பிறகு பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸிடம் பென் ஸ்டோக்ஸின் டிக்ளார் முடிவுகுறித்து கேட்கப்பட்டது. ஆனால் அவர் “நான் டிக்ளார் செய்திருக்க மாட்டேன்” என்று பதிலளித்திருந்தார். ஒருவேளை கூடுதலாக 30 அல்லது 40 ரன்கள் இங்கிலாந்து கிடைத்திருந்தால், போட்டியின் முடிவு மாறுபட்டதாக கூட இருந்திருக்கலாம்.

3. அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தும் இங்கிலாந்து பேட்டர்கள்!

இங்கிலாந்து வீரர்களை பொறுத்தவரையில் ‘பாஸ்பால்’ என்னும் ஒற்றை மந்திரத்திற்காக அனைவரும் அதிரடியான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகின்றனர். இங்கிலாந்து அணியின் ஓப்பனர்கள் சிறப்பாக செயல்படாத போது களத்திற்கு வந்த ஜோ ரூட்டும், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை அதிகமாக பயன்படுத்தி அதிரடியாகவே விளையாடினார்.

பேட் கம்மின்ஸிற்கு எதிராக அவர் ரிவர்ஸ்வீப் ஆட முயற்சித்த் போது, பந்தானது ஸ்டம்பை பெய்ல்ஸ்க்கு மேலாக குறைந்த இடைவெளியில் மிஸ் செய்தது. ஆனாலும் அவர் அடுத்து பந்துவீச வந்த போலண்டிற்கு எதிராக மீண்டும் ரிவர்ஸ்வீப் ஷாட்டை ஆடினார். அப்போது அவருக்கு சிக்சர் மற்றும் பவுண்டரி என்ற ரிசல்ட் கிடைத்தது. ஆனால் ஒருவேளை முதல்முறையாகவே ரூட் போல்டாகியிருந்தால் இங்கிலாந்தின் நிலைமை தலைகீழாக மாறியிருக்கும். ஏனெனில் முதல் இன்னிங்ஸில் ரூட் மட்டும் தான் சிறப்பாக விளையாடி 118 ரன்களை குவித்திருந்தார். மற்ற பேட்டர்களும் அதிரடியான ஆட்டத்திற்கு சென்றே விக்கெட்டுகளை இழந்தனர்.

4. 72 ரன்களில் 3 விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமல் சொதப்பிய இங்கிலாந்து!

என்ன தான் இங்கிலாந்து அணி சில தவறுகளை செய்திருந்தாலும், அவர்களின் அதிரடி அணுகுமுறை வெற்றி லைனுக்கு அருகிலேயே கொண்டுவந்தது. ஆனாலும் அவர்களால் அந்த வெற்றிக்கான பார்டர் லைனை தாண்ட முடியாமல் போனதற்கும், பாஸ்பால் முறையே காரணமாகவே இருந்தது. ஏனென்றால் ஒரு டி20 மற்றும் கல்லி கிரிக்கெட்டை போலவே யோசித்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ், லைன் மற்றும் லெந்துகளில் கவனம் செலுத்தாமல், பேட்டர்களை தாக்கி விக்கெட்டுகளை வீழ்த்துவதிலேயே கவனம் செலுத்தினார்.

வெற்றிக்கு தேவையான கடைசி நேரத்தில் இரண்டாவது புதிய பந்தை எடுத்தபோதும், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சரியான லெந்துகளில் பந்தை வீசவில்லை. மாறாக LBW மற்றும் பவுன்சர்களை வீசி விக்கெட்டை வீழ்த்துவதிலேயே கவனம் செலுத்தினர். ப்ரைம் பவுலரான ஆண்டர்சனுக்கு பந்துவீச கொடுக்காதது ஏன் என்ற காரணமும் புரியாமலே இருந்தது. உண்மையில் முக்கியமான அந்த நேரத்தில் இங்கிலாந்து அணி டெஸ்ட்க்கான கிராஃபிலிருந்து தவறிப்போனதாகவே தோன்றியது.

5. 2 வருடங்கள் விளையாடாத வீரர்களை அணிக்குள் எடுத்துவந்தது!

கிட்டத்தட்ட 2 வருடங்கள் விளையாட மொயின் அலியையும், 2 வருடங்கள் விக்கெட் கீப்பிங் செய்யாத பார்ஸ்டோவையும், ஆடும் 11 வீரர்களில் இங்கிலாந்து அணி கொண்டுவந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அறிமுகப்போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த ரெஹான் அகமது சாதனையை படைத்திருந்தார். அவரை விட்டுவிட்டு 2 வருடங்கள் விளையாடாத மொயின் அலியை அணிக்குள் எடுத்துவந்தது இங்கிலாந்து.

மாறாக சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்திருந்த பென் ஃபோக்ஸை டிராப் செய்துவிட்டு, ஜானி பேர்ஸ்டோவை அணிக்குள் எடுத்துவந்து சொதப்பியது. வீரர்களை பார்க்காமால் வெறும் பேட்டிங்கின் டெப்த்திற்காக மட்டுமே வீரர்களை அணிக்குள் எடுத்தது போல் இருந்தது. இந்நிலையில் முக்கியமான நேரத்தில் 2 கேட்ச்களை கோட்டைவிட்டார் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ. ‘பாஸ்பால்’ என்ற அதிரடியான மாற்றத்திற்காக செய்யப்பட்ட இந்த மாற்றங்கள் இங்கிலாந்து அணிக்கு இந்த போட்டியில் பாதகமாக மாறியது. இந்த அணுகுமுறை ஆரோக்கியமான ஒரு மாற்றமாக இருக்கப்போகிறதா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com