”எங்க அணிக்கு வந்து CUP வாங்கி கொடுங்க!” - RCB ரசிகர் கேட்ட கேள்விக்கு தோனி அளித்த நேர்மையான பதில்!

5 கோப்பையை சிஎஸ்கே அணிக்கு ஜெயித்து கொடுத்துட்டிங்க, அதேபோல ஆர்சிபி அணிக்கு வந்து ஒரு ஐபிஎல் கோப்பை வென்று கொடுங்க என தோனியிடம் RCB ரசிகர் கேட்ட கேள்வியும், அதற்கு தோனி அளித்த சுவாரசியமான பதிலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
dhoni
dhoniX

2024 ஐபிஎல் ஏலம் முடிவடைந்த நிலையில் RCB அணி ஏலத்தில் எடுத்த வீரர்களை பார்த்து, அந்த அணியின் ரசிகர்கள் கடும் விரக்தியில் உள்ளனர். எதற்காக இந்த வீரர்கள் என பெரும்பாலான ஆர்சிபி ரசிகர்கள் விரக்தி பதிவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் ஆர்சிபி ரசிகர் ஒருவர் “எங்க அணிக்கு வந்து CUP வாங்கி கொடுங்க” என தோனியிடம் கேட்ட கேள்வி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

என் ரசிகர்கள் தான் எனக்கு முக்கியம்! - தோனியின் நேர்மையான பதில்

ஆர்சிபி ரசிகர் தோனியிடம் கேள்வி கேட்கும் வீடியோ பதிவில், ஆர்சிபி ரசிகர் ஒருவர் “நான் கடந்த 16 வருடங்களாக தீவிர ஆர்சிபி ரசிகர். நீங்க சிஎஸ்கே அணிக்காக 5 ஐபிஎல் கோப்பையை வாங்கி கொடுத்துட்டிங்க. ஒருமுறை ஆர்சிபி அணிக்கு வந்து ஒரேஒரு ஐபிஎல் கோப்பை வின் பண்ணி கொடுங்க” என்ற கேள்வியை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த எம்எஸ் தோனி, “ஆர்சிபி அணி ஒரு சிறந்த அணி. கோப்பையை வெல்வதில் ஒவ்வொரு அணிக்கும் இருக்கும் ஒரே பிரச்னை திட்டமிடுதல் இல்லாமை மட்டும் தான். ஏனென்றால் ஒவ்வொரு அணியும் கோப்பையை வெல்லுமளவு சிறந்த வீரர்களை வைத்துள்ளனர். அவர்கள் வைத்திருக்கும் அனைத்து வீரர்களும் தேவையான போட்டியில் விளையாடிவிட்டால் எந்த அணி வேண்டுமானாலும் கோப்பை வெல்ல முடியும். ஆனால் இங்கு இருக்கும் பிரச்னை என்னவென்றால் முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக சரியான நேரத்தில் விளையாடமுடியாமல் போய்விடுகிறார்கள். அதனால் தான் இங்கு பிரச்னை எழுகிறது.

ஆர்சிபி மட்டுமல்ல அனைத்து 10 அணிகளும் கோப்பை வெல்லவேண்டும் என்பது தான் எனது ஆசை. ஆனால் எனது அணியை விட்டு விலகிவந்து மற்றொரு அணி கோப்பை வெல்வதற்கு நான் உதவினால், என்னுடைய ரசிகர்கள் என்ன நினைப்பார்கள். அவர்களுக்கும் ஆசை இருக்கிறது இல்லையா. இது எல்லாவற்றிற்கும் மாறாக எனது அணியிலேயே சரிசெய்ய வேண்டிய நிறைய வேலைகள் எனக்கு இருக்கின்றன” என்று தோனி பதிலளித்துள்ளார். தோனி தன்னுடைய ரசிகர்களுக்காக நேர்மையாக அளித்த இந்த பதிலை அனைத்து சிஎஸ்கே ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com