SA20 ஏலம்| சூப்பர் கிங்ஸை கதறவிட்ட கங்குலி.. 16.5 மில்லியனுக்கு விலைபோன ’டெவால்ட் பிரெவிஸ்’!
SA20 ஏலத்தில் 16.5 மில்லியனுக்கு விலைபோன டெவால்ட் பிரெவிஸ்
டெவால்ட் பிரெவிஸை விலைக்கு வாங்க 16 மில்லியன் வரை போராடியது சூப்பர் கிங்ஸ்
சூப்பர் கிங்ஸின் அதிகப்படியான ஏலத்தை முறியடித்து பிரெவிஸை தூக்கினார் கங்குலி
தென்னாப்பிரிக்கா டி20 லீக்கின் நான்காம் பதிப்பு வரும் டிசம்பர் 26 முதல் தொடங்கி ஜனவரி 25-ம் தேதிவரை நடக்கவிருக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம் நேற்று நடைபெற்ற நிலையில், ஏலத்தில் 16.5 மில்லியன் ரிங்கிட் விலைக்கு சென்ற டெவால்ட் பிரெவிஸ் தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் அதிகப்படியான விலைக்கு சென்ற வீரராக சாதனை படைத்தார்.
சூப்பர் கிங்ஸை கதறவிட்ட கங்குலி..
தென்னாப்பிரிக்கா டி20 லீக்கானது (SA20) வெற்றிகரமாக 4வது சீசனை எட்டியுள்ளது. முடிவடைந்துள்ள 3 சீசன்களில், முதலிரண்டு சீசன்களில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், 3வது சீசனில் எம்ஐ கேப் டவுன் அணியும் கோப்பை வென்று அசத்தியுள்ளன.
இந்நிலையில் 4வது சீசனுக்கான வீரர்கள் ஏமல் நேற்று நடைபெற்றது. இதில் வளர்ந்துவரும் அதிரடி வீரரான டெவால்ட் பிரெவிஸை கைப்பற்ற சூப்பர் கிங்ஸ் அணிக்கும், பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணிக்கும் இடையே போட்டி நிலவியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு அங்கமாக இருந்துவரும் டெவால்ட் பிரேவிஸ், கடந்த ஐபிஎல் சீசனில் சிறந்த கண்டுபிடிப்பாக விளங்கினார். தொடர்ந்து தென்னாப்பிரிக்கா சர்வதேச அணியில் இடம்பிடித்த அவர், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் தன்னுடைய அபாரமான திறமையை வெளிப்படுத்தி எல்லோரையும் கவர்ந்திழுத்தார்.
இந்தசூழலில் SA20 லீக்கிலும் டெவால்ட் பிரெவிஸை இழக்க விரும்பாத சூப்பர் கிங்ஸ் அணி 16 மில்லியன் வரைக்கும் அவரை விலைக்கு வாங்க முயற்சித்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் சூப்பர் கிங்ஸ் அணியின் பிட்டை தோற்கடித்த கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் சவுரவ் கங்குலி 16.5 மில்லியன் விலைக்கு தட்டி தூக்கினார். இது இந்திய ரூபாயின் மதிப்பில் 8.31 கோடியாகும், இந்த மதிப்பு சென்னை சூப்பர் கிங்ஸில் அவர் பெறுவதை விட இரண்டுமடங்கு அதிக விலையாகும்.
டெவால்ட் பிரெவிஸை விலைக்கு வாங்கியபின் மகிழ்ச்சியாக பேசிய கங்குலி, “நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம், அவர் ஒரு சிறந்த வீரர் என்று நான் நினைக்கிறேன். 16.5 மில்லியன் பெரிய விலை என்ற மறுபக்கத்தில், அவர் எங்களுடைய மைதானத்திற்கு தகுந்தவீரராகவும், பிரிட்டோரியாவில் சிறப்பாக செயல்படுவார் என்றும் நம்புகிறேன். எதிர்காலத்தில் அவரை கேப்டனாக மாற்றுவது குறித்து நாங்கள் இன்னும் யோசிக்கவில்லை. அவர் ஒரு மிகப்பெரிய திறமைசாலி, சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அவரது ஆட்டம் மிகவும் முன்னேறியுள்ளது” என்று பேசியுள்ளார்.
பிரிட்டோரியா கேபிடல்ஸை பொறுத்தவரையில் முதல் சீசனில் இறுதிப்போட்டிவரை முன்னேறி தோற்றது. 2025-26 சீசனை பொறுத்தவரையில் ஏற்கனவே கேபிடல்ஸ் அணியில் ரஸ்ஸல் மற்றும் ரூதர்ஃபோர்டு போன்ற அதிரடி வீரர்கள் இருப்பதால். மிடில் ஆர்டரில் பிரெவிஸ் சிறந்த பங்களிப்பை கொடுக்கும் பட்சத்தில் டாப் ஆர்டரிலும், பினிசிங்கிலும் ரூதர்ஃபோர்டு மற்றும் ரஸ்ஸல் அவர்களுடைய வேலைகளை சிறப்பாக முடிப்பார்கள் என்று கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.