"இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு செல்வதே எங்களுடைய இலக்கு!" - டெவான் கான்வே

நடப்பு 2023 உலகக்கோப்பையின் முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.
டெவான் கான்வே
டெவான் கான்வேTwitter

நடப்பு உலகக்கோப்பையின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளன. முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள், இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முதல் அரையிறுதிப்போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிலையில், இரண்டு அணி வீரர்களும் ஒரு பெரிய மோதலுக்காக தயாராகி வருகின்றனர். சொந்த மைதானத்தில் விளையாடுவது இந்திய அணிக்கு சாதகமாக இருந்தாலும், இந்தியாவை வீழ்த்தும் முனைப்போடு களமிறங்கவிருப்பதாக நியூசிலாந்து தொடக்க வீரர் டெவான் கான்வே தெரிவித்துள்ளார்.

மூத்த வீரர்களின் அனுபவம் எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்! - டெவான் கான்வே

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி மோதல் குறித்து பேசியிருக்கும் டெவான் கான்வே, “இந்தியா எந்தளவு வலுவான அணியாக இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர்கள் ஒரு அணியாக மொமண்ட்டை எடுத்துச்செல்கிறார்கள். ஆனால் நாங்கள் அந்த சவாலை எதிர்நோக்குகிறோம். அரையிறுதியில் போட்டியை நடத்தும் நாட்டிற்கு எதிராக விளையாடுவதில் அதிக உற்சாகத்துடன் இருக்கிறோம். அவர்கள் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்றாலும், அந்த சவாலை எதிர்கொள்ள நாங்களும் தயாராகவே இருக்கிறோம்" என்று நியூசிலாந்து கிரிக்கெட் (NZC) பகிர்ந்த வீடியோவில் கான்வே கூறியுள்ளார்.

NZ vs ENG
NZ vs ENG

மேலும், "உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இருப்பதே எங்களுடைய ஒரே இலக்கு. 2019-க்கு பிறகு இது எங்களுக்கு கிடைத்த மற்றொரு சிறந்த சந்தர்ப்பம். எங்கள் முகாமில் நிறைய அனுபவ வீரர்களை பெற்றிருப்பது எங்களுடைய அதிர்ஷ்டம், இதற்கு முன்பு இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்த மூத்த வீரர்கள் எங்களை வழிநடத்துவார்கள். நாங்கள் சில நல்ல கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடி வருகிறோம். எங்களைப் பொறுத்தவரை, அதைத் தொடர்ந்து செய்துவிட்டாலே போதும் இறுதிப்போட்டிக்கு தானாகவே சென்றுவிடுவோம்” என கான்வே மேலும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com