IPL 2024: அணியிலிருந்து விலகிய இன்னொரு வீரர்.. டெல்லி அணிக்கு பின்னடைவு?

டெல்லி அணியிலும் இருந்து அடுத்தடுத்து இரண்டு வீரர்கள் விலகியிருப்பது அந்த அணிக்குக் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி, லுங்கி நிகிடி
டெல்லி, லுங்கி நிகிடிட்விட்டர்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன், இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. மார்ச் 22-ஆம் தேதி தொடங்க இருக்கும் இத்தொடரில் வழக்கம்போல் 10 அணிகளே களம் காண இருக்கின்றன.இத்தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்காக வீரர்கள் எல்லாம் அந்த அணியின் கூடாரங்களுக்குள் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க மறுபுறம், இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணி பற்றிய செய்திகள்தான் தினந்தோறும் வைரலாகி வருகின்றன. சமீபத்தில்கூட, மும்பை அணி பங்கேற்கும் தொடக்கப் போட்டிகளில் அவ்வணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட சில வீரர்கள் விலக இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இது மும்பை அணிக்குப் பெரும் தலைவலியை உருவாக்கி இருக்கும் நிலையில், அதுபோல் டெல்லி அணிக்கும் அடுத்து ஒரு வீரர் விலகியிருப்பது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த லுங்கி நிகிடி காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஜேக் ப்ரேசர் மெக்குர்க்கை டெல்லி நிர்வாகம் மாற்று வீரராக அறிவித்துள்ளது. ஜேக் ப்ரேசர் மெக்குர்க்கை அவரது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு டெல்லி நிர்வாகம் சேர்த்துள்ளது.

முன்னதாக, டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் கடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ரூ.4 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து இளம் வீரர் ஹாரி புரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சீசனில் இருந்து விலகுவதாகக் கடைசி நேரத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்களது விலகல் டெல்லி அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com