WPL | முதல் தொடரிலேயே அசத்தல்.. கடைசி ஓவரில் ஹாட்ரிக் எடுத்த DC வீராங்கனை.. நந்தினி சர்மா யார்?
மகளிர் பிரீமியர் லீக்கில் ஹாட்ரிக் எடுத்த முதல் டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சாளர் என்ற வரலாற்றை நந்தினி சர்மா படைத்தார்.
மகளிர் பிரீமியர் லீக்கில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட் செய்த குஜராத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 209 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக ஷோபி டிவைன் 42 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்ஸருடன் 95 ரன்கள் குவித்தார். கேப்டன் கார்டினர் 49 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி தரப்பில் நந்தினி சர்மா 5 விக்கெட்களைச் சாய்த்தார். பின்னர், 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்டர் லிஜ்ஜிலி லீ 86 ரன்களும் லாரா வோல்வார்ட் 77 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து அவ்வணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களே எடுத்தது. இதன்மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியைத் தழுவியது. எனினும், இந்தப் போட்டியில் 5 விக்கெட்களைச் சாய்த்த நந்தினி சர்மா புதிய சாதனை படைத்தார். குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் இன்னிங்ஸின் 20வது ஓவரில், கனிகா அஹுஜா, ராஜேஸ்வரி கெய்க்வாட் மற்றும் ரேணுகா சிங் ஆகியோரை நந்தினி சர்மா ஹாட்ரிக் விக்கெட் மூலம் வெளியேற்றினார். இதன்மூலம், மகளிர் பிரீமியர் லீக்கில் ஹாட்ரிக் எடுத்த முதல் டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சாளர் என்ற வரலாற்றை நந்தினி சர்மா படைத்தார். ஏற்கெனவே ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்த வீச்சாளர்களாக இஸ்ஸி வோங் (மும்பை இந்தியன்ஸ்), கிரேஸ் ஹாரிஸ் (யுபி வாரியர்ஸ்) மற்றும் தீப்தி சர்மா (யுபி வாரியர்ஸ்) ஆகியோருடனும் நந்தினி சர்மா இணைந்தார்.
யார் இந்த நந்தினி சர்மா?
சண்டிகரைச் சேர்ந்த நந்தினி சர்மா, 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி பிறந்தவர். தனது வேகப்பந்து வீச்சு மற்றும் உள்நாட்டு டி20 கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் வீரராக நந்தினி அறியப்படுகிறார். உள்நாட்டுப் போட்டிகளில் சண்டிகர் மகளிர் அணியையும், மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகளில் வடக்கு மண்டல மகளிர் அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளார். 2026ஆம் ஆண்டில், டெல்லி கேபிடல்ஸால் ஏலத்தில் ரூ. 20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு, நந்தினி தனது முதல் மகளிர் பிரீமியர் லீக் வாய்ப்பைப் பெற்றார்.

