’0 ரன்னுக்கு 3 விக்கெட்டுகள்..’ சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலகசாதனை படைத்த தீப்தி சர்மா!
மகளிர் ஆசிய கோப்பையில் இந்தியா-தாய்லாந்து போட்டியில், இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 159 ரன்கள் குவித்தது. சபாலி வெர்மா 36 பந்தில் 64 ரன்கள் அடித்து பிரகாசித்தார். 160 ரன்கள் இலக்காக களமிறங்கிய தாய்லாந்து அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 65 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் தீப்தி சர்மா 1.1 ஓவரில் 0 ரனுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து அபூர்வ சாதனை படைத்தார்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், யுஏஇ, தாய்லாந்து, ஹாங் ஹாங்-சீனா, இந்தோனேசியா முதலிய 8 அணிகள் அடங்கிய மகளிர் ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்டு 28ஆம் தேதிமுதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் இந்தியா மற்றும் தாய்லாந்து மகளிர் அணிகள் மோதிய போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சபாலி வெர்மா 36 பந்தில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 64 ரன்கள் விளாசினார்.
160 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய தாய்லாந்து அணி, இந்தியாவின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 65 ரன்னுக்கு சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய நந்தினி சர்மா மற்றும் தீப்தி சர்மா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். அதிலும் 1.1 ஓவர் மட்டுமே வீசி 0 ரன்களுடன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய தீப்தி சர்மா சாதனை படைத்தார். ரன்களே விட்டுக்கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
இந்தசூழலில் இப்போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனையாக மாறி உலகசாதனை படைத்தார். முதலிடத்தில் இருந்த தாய்லாந்து வீராங்கனையின் 170 விக்கெட்டுகளை உடைத்த அவர் 171* விக்கெட்டுகளுடன் முதலிடம் பிடித்தார்.

