’தரமான கம்பேக்..’ 23வது ODI சதம் விளாசிய டி-காக்.. இந்தியாவிற்கு 271 ரன்கள் இலக்கு!
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா வீரர் குயிண்டன் டிகாக் 106 ரன்கள் குவித்து 23வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். இந்திய அணிக்கு 271 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா தொடரை வெல்லும் முயற்சியில் பேட்டிங் செய்யவுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது.
முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என வென்ற தென்னாப்பிரிக்கா அணி, இந்தியாவை அவர்களின் சொந்தமண்ணில் 25 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை வென்று சாதனை படைத்தது.
தொடர்ந்து நடைபெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றதால் 1-1 என சமனிலையில் உள்ளது..
இந்நிலையில் தொடர் யாருக்கு என்ற முடிவை எட்டும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியானது விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றுவருகிறது.
விசாகப்பட்டினத்தில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் வரிசையாக 20 போட்டிகளில் டாஸை இழந்த இந்தியா அதிர்ஷ்டவசமாக இன்று டாஸை வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது.. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய குயிண்டன் டிகாக் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 23வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்தார். இது இந்தியாவிற்கு எதிராக அவருடைய 7வது ஒருநாள் சதமாகும்.
8 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என துவம்சம் செய்த டிகாக் 106 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த வீரர்கள் யாரும் பெரிதாக நிலைத்து நின்று ஆடவில்லை. இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்ற, 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்கா 270 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
271 ரன்களை இலக்கை நோக்கி தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா பேட்டிங் செய்யவிருக்கிறது..
தரமான கம்பேக் கொடுத்த டிகாக்..
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த குயிண்டன் டிகாக், மீண்டும் தென்னாப்பிரிக்கா அணிக்கு கம்பேக் கொடுத்து ஒருநாள் போட்டிகளில் விளையாடிவருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தரமான கம்பேக் கொடுத்த டிகாக், 63, 123, 53 என விளாசி அசத்தினார்.
அதனைத்தொடர்ந்து தற்போது இந்தியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 106 ரன்கள் குவித்த அவர், தன்னுடைய 23வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். ஒரு விக்கெட் கீப்பராக குமார் சங்ககராவின் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார்.

