
போட்டி 7: வங்கதேசம் vs இங்கிலாந்து
முடிவு: 137 ரன்களில் இங்கிலாந்து வெற்றி (இங்கிலாந்து - 364.9; வங்கதேசம் - 227 ஆல் அவுட், 48.2 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: டேவிட் மலான்
பேட்டிங்: 107 பந்துகளில் 140 ரன்கள். 16 ஃபோர்கள், 5 சிக்ஸர்கள்
21 உலகக் கோப்பை போட்டிகளில் மட்டுமே விளையாடிய 36 வயது வீரர் ஒருவர் நடப்பு சாம்பியன்களின் ஸ்குவாடில் இடம்பெறுவது சாதாரண விஷயம் இல்லை. தன் அற்புதமான ஃபார்மின் காரணமாக இங்கிலாந்து ஒருநாள் அணியில் தொடர்ந்து இடம்பெற்றிருந்த அவர், ஜேசன் ராயை விடவுமே அணி நிர்வாகத்தால் நம்பப்பட்டார். உலகக் கோப்பை அணியிலும் இடம்பிடித்தார். ஆனால் அவருக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ரொம்பவே தடுமாறிய மலான், வெறும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். களத்தில் இருந்த சில நிமிடங்களும் ரொம்பவே தடுமாறினார் . பதற்றத்தோடு அவர் அந்தப் போட்டியை எதிர்கொண்டது தெளிவாகத் தெரிந்தது ஆனால் இந்தப் போட்டியில் தன் முழு திறனையும் வெளிப்படுத்தியிருக்கிறார் மலான்.
வங்கதேசத்துக்கு எதிரான தன் இன்னிங்ஸை அதீத கவனத்தோடு எதிர்கொண்டார் மலான். தனக்கு மிகவும் தோதான இடங்களில் வரும் பந்துகளை மட்டும் அடித்தவர், மற்ற பந்துகளை பெரும்பாலும் சீண்டாமலேயே விட்டார். முதல் 10 பந்துகளில் ஒரு ஃபோர் அடித்திருந்த அவர், மற்ற 9 பந்துகளில் ரன் எடுக்கவேயில்லை. அந்த அளவுக்கு மிகவும் கவனமாக ஆட்டத்தை எதிர்கொண்டார். டஸ்கின் அஹமது பந்துவீச்சில் ரொம்பவே அடக்கி வாசித்த அவர், சில ஓவர்களுக்குப் பிறகு முஸ்தாஃபிசுர் ரஹ்மானை டார்கெட் செய்து அடிக்கத் தொடங்கினார். ஃபிஸ் வீசிய ஐந்தாவது ஓவரில் அடுத்தடுத்து ஒரு ஃபோரும், ஒரு சிக்ஸும் அடித்த மலான், ஏழாவது ஓவரிலும் அதையே செய்தார். என்ன இம்முறை சிக்ஸுக்குப் பிறகு ஃபோர் வந்தது.
மறுபக்கம் ஜானி பேர்ஸ்டோவும் அதிரடி காட்டியதால், சீக்கிரமே ஸ்பின்னர்களைப் பயன்படுத்தத் தொடங்கினார் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன். ஆனால் மலானை அது கொஞ்சம் கூட அச்சுறுத்தவில்லை. மஹதி ஹசன், மெஹதி ஹசன் மிராஜ், ஷகிப் என அனைவரின் ஓவர்களிலும் பௌண்டரிகள் பறந்தன. பந்துகள் பௌண்டரிக்குப் பறந்தாலும், ஸ்பின்னர்கள் பந்துவீச்சில் நன்றாக ஸ்டிரைக் ரொடேஷனும் செய்யத் தொடங்கினார். 39 பந்துகளில் தன் முதல் உலகக் கோப்பை அரைசதத்தை நிறைவு செய்தார் அவர்.
டிரிங்ஸுக்குப் பிறகு மீண்டும் வேகப்பந்துவீச்சாளர்களின் முறை தொடங்கியது. இப்போது அதற்கு முன் அடிபடாத ஷொரிஃபுல் இஸ்லாம், டஸ்கின் அஹமது ஆகியோர் இப்போது அடி வாங்கினார்கள். ஆனால் 50 பந்துகள் சந்தித்த பிறகு தன் வேகத்தை அப்படியே குறைத்துக்கொண்டார் மலான். கிட்டத்தட்ட 30 பந்துகள் அவர் பௌண்டரியே அடிக்கவில்லை. இருந்தாலும் ஒன்று இரண்டு என எடுத்துக்கொண்டே இருந்ததால் ரன் வந்துகொண்டேதான் இருந்தது. இறுதியில் 91 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார் மலான். 2023ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் நான்காவது சதம் இது.
சதமடிப்பதற்கு முன் கடைசி 40 பந்துகளில் ஒரேயொரு ஃபோர் தான் அடித்தார் அவர். ஆனால் சதமடித்தவுடன் விஸ்வரூபம் எடுத்தார். மெஹதி ஹசன் மிராஜ் வீசிய 33வது ஓவரில் 4, 6, 6, 4 என பறக்கவிட்டு மிரட்டினார் மலான். ஷொரிஃபுல் வீசிய அடுத்த ஓவரில் ஒரு ஃபோர்; டஸ்கின் வீசிய 37வது ஓவரில் சிக்ஸர் என நொறுக்கினார். மஹதி ஹசன் வீசிய 38வது ஓவரில் ஒரு ஃபோர் அடித்த அவர், அடுத்த பந்தில் போல்டானார். ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நின்று மரியாதை செலுத்த பெவிலியன் திரும்பினார் அந்த 36 வயது இளம் வீரர்.
பரிசளிப்பு விழாவின்போது அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதன் ரகசியம் பற்றி கேட்கப்பட்டது. "எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. ஏதேனும் காரணம் இருக்குமெனில் அது அனுபவமாகத்தான் இருக்க முடியும். அணியின் வெற்றிக்குப் பங்களித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. உலகக் கோப்பையில் விளையாடுவதே மிகப் பெரிய விஷயம். இந்த அரங்கில் வந்து சிறப்பாக செயல்பட்டு, வெற்றிக்கும் காரணமாக இருப்பது அளவிடமுடியாத சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது" என்று கூறினார் மலான். ஸ்பின்னர்களுக்கு எதிரான அவரது தடுமாற்றம் பற்றிய கேள்விக்கு, "ஒரு சிலர் தங்கள் பார்வையை சரியென நிரூபிக்க ஆதாரமே இல்லாவிட்டாலும் ஒரு கதையை ஏற்படுத்திவிடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். சில நேரங்களில் நான் நல்ல ஷாட்கள் ஆடுவேன். சில நேரங்களில் மோசமான ஷாட்களும் ஆடுவேன். ஆனால் அதற்காக நம் மீதே சந்தேகம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. நான் யாருக்கும் எதையும் நிரூபிப்பதற்காக இங்கு வரவில்லை" என்று கூறினார்.