பையை எடுத்தவர்கள் திரும்ப ஒப்படைத்துவிடுங்கள்! உருக்கமாக பேசிய டேவிட் வார்னர்! என்ன நடந்தது?

டேவிட் வார்னர் தன்னுடைய பையை தவறவிட்டுவிட்டதாகவும், அதில் தன்னுடைய உணர்வுபூர்வமான பொருள் இருப்பதாகவும், அதை திரும்ப ஒப்படைத்துவிடுங்கள் எனவும் உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
david warner
david warnerInsta

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் டேவிட் வார்னர் (164 ரன்கள்) மற்றும் மிட்செல் மார்ஸ் (90, 96 ரன்கள்) இருவரின் அற்புதமான பேட்டிங்கால் 360 மற்றும் 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் தொடருடன் தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட்டின் ஓய்வை அறிவித்திருக்கும் டேவிட் வார்னர், கடைசி டெஸ்ட் போட்டியில் நாளை களமிறங்கவிருக்கிறார். தன்னுடைய ஒருநாள் கிரிக்கெட் ஓய்வையும் அறிவித்திருக்கும் வார்னர், சமீபத்தில் ஒரு உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார். அதில் தன்னுடைய பையை யாரோ எடுத்துவிட்டதாகவும், அதை திருப்பியளித்துவிடுங்கள் எனவும் உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் என் மகள்களின் பொருட்களும் இருக்கின்றன!

திருடுப்போன பை குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கும் அவர், “ யாரோ என்னுடைய லக்கேஜில் இருந்த என்னுடைய பையை எடுத்துள்ளார்கள். அதில் எனது மகள்களுக்கு வாங்கிய பரிசு பொருட்களும், எனது மனதிற்கு நெருக்கமான பச்சை நிற தொப்பியும் இருக்கின்றது. அந்த பச்சை நிற தொப்பி எனக்கு உணர்வுபூர்வமானது. என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் அதை அணிந்து விளையாட வேண்டும் என விரும்புகிறேன்.

ஒருவேளை நீங்கள் என்னுடைய பையை விரும்பினால் அதேபோன்ற மற்றொரு பை என்னிடம் இருக்கிறது. அதை நான் உங்களுக்கு கொடுக்க தயாராக இருக்கிறேன். எனது பையை என்னிடமோ அல்லது ஆஸ்திரேலிய வாரியத்திடமோ திருப்பி கொடுக்கும்போது நீங்கள் எந்த பிரச்னையையும் சந்திக்க மாட்டீர்கள். எனவே நீங்கள் என்னுடைய பையை திருப்பி கொடுத்துவிடுங்கள்” என உருக்கமாக பேசி பதிவிட்டுள்ளார். அந்தப் பையில் டேவிட் வார்னரின் டெஸ்ட் போட்டிகளில் அணியும் தொப்பி உள்ளது. ஆஸ்திரேலிய வீரர்களை பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகளுக்கு என பிரத்யேகமாக அளிக்கப்படும் பச்சை நிற தொப்பியை மிகப் பெரிய கவுரவமான ஒன்றாக கருதுவார்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com