டெல்லி | காற்று மாசுவைக் காரணம் காட்டிய உலகின் 3வது வீரர்.. விலகியதால் அபராதம்!
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டினைக் காரணம் காட்டி, உலகின் முன்னணி வீரர் ஒருவர், இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து விலகியிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஏற்கெனவே மைதான பராமரிப்பு மற்றும் சுகாதாரம் குறித்து புகார்கள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், உலகின் தரவரிசைப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ள டென்மார்க் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ஆண்டர்ஸ் ஆன்டன்சென், டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டினைக் காரணம் காட்டி தொடரிலிருந்து விலகியுள்ளார். 4 முறை உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற இவர், டெல்லியின் காற்றின் தரக் குறியீட்டின் ஸ்கிரீன்ஷாட்டை வெளியிட்டு, 348 புள்ளிகள் ஆபத்தானது என்று பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர், "டெல்லியில் தற்போது நிலவும் அதீத காற்று மாசுபாடு காரணமாக, ஒரு பேட்மிண்டன் தொடரை நடத்த இது சரியான இடமாக எனக்குத் தோன்றவில்லை. அதனால் நான் போட்டியிலிருந்து விலகுகிறேன்" என தெரிவித்துள்ளார். எந்தவொரு முறையான மருத்துவக் காரணமும் இன்றிப் போட்டியிலிருந்து அவர் விலகியதால், உலக பேட்மிண்டன் சம்மேளனம் (BWF) அவருக்கு $5,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4.2 லட்சம்) அபராதம் விதித்துள்ளது. எனினும், பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தனது உடல்நலமே முக்கியம் என்று அவர் நாடு திரும்பியுள்ளார். ஆன்டன்சென், இந்தியா ஓபன் தொடரைப் புறக்கணிப்பது இது முதல்முறையல்ல. கடந்த மூன்று ஆண்டுகளாகவே, "டெல்லியின் காற்று எனக்கு ஒத்துக்கொள்ளாது" என்று கூறி விலகி வருவது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், ‘ஆகஸ்ட் மாதம் இங்கு உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது. அப்போதாவது கோடைக்காலம் என்பதால் காற்று தரம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆன்டன்சென் மட்டுமல்லாது, அவரது நாட்டு வீராங்கனையான மியா பிளிச்ஃபெல்ட்டும் டெல்லி மைதான நிலை குற்றஞ்சாட்டியுள்ளார். "மைதானம் சுத்தமாக இல்லை. ஆடுகளத்தில் பறவை எச்சம் உள்ளது. தூசு அதிகமாக இருப்பதால் ஆரோக்கியமற்ற சூழல் நிலவுகிறது" என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார். வெளிநாட்டு வீரர்களின் இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியப் பேட்மிண்டன் சங்கம் மறுத்துள்ளது. சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சய் மிஸ்ரா, "உள்விளையாட்டரங்கம் என்பதால் வெளிப்புற மாசு உள்ளே வராது. மைதானம் சுத்தமாகவே உள்ளது. மியா போன்ற வீராங்கனைகளுக்குத் தூசி அலர்ஜி இருக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட கருத்து. மற்ற வீரர்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
இந்திரா காந்தி உட்புற அரங்கம் ஆகஸ்ட் மாதம் BWF உலக சாம்பியன்ஷிப்பை நடத்த உள்ளது. இதன் காரணமாகவே, இந்தியா ஓபனை ஒரு சோதனை நிகழ்வாக இங்கே மாற்றியுள்ளது.

