கிரிக்கெட் உலகக்கோப்பைகளை வென்று குவிக்கும் மரபை வைத்திருக்கும் ஆஸ்திரேலிய அணியில், ஒரு விபத்து கேப்டனாக மட்டுமே மாறியவர் பாட் கம்மின்ஸ். பல்வேறு அசாதாரண சூழலில் கேப்டன் பொறுப்பிற்கு வந்தாலும் தன்னுடைய திறமையாலும், அணியை ஒரு குழுவாக எடுத்துச்செல்லும் பண்பாலும் கேப்டன்சியில் மிளிர தொடங்கிய பாட் கம்மின்ஸ், கிரிக்கெட் உலகில் தலைசிறந்த கோப்பைகள் என கருதப்படும் WTC மற்றும் ODI உலகக்கோப்பைகளை வென்று ஒரு வெற்றிக்கேப்டனாக வலம் வருகிறார்.
நடந்து முடிந்த 2023 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஒரு சிறப்பான பந்துவீச்சையும், தலைமைப்பண்பும் கொண்டிருந்த கம்மின்ஸ், இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி உலகக்கோப்பையை தட்டிச்சென்றார். 2/34 என சிறந்த பந்துவீச்சை வைத்திருந்த கம்மின்ஸ், போட்டியில் முக்கியமான விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றி ஆஸ்திரேலியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இந்நிலையில், ஒரு சிறந்த உலகக்கோப்பை தொடரை கொண்டிருந்த பாட் கம்மின்ஸ், மரணப்படுக்கையில் இருக்கும் போது நினைவுகூறும் ஒரு கிரிக்கெட் தருணத்தை பற்றி கூறியுள்ளார்.
2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்த பாட் கம்மின்ஸ், “ உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் வெல்ல எங்களுக்கு விராட் கோலியின் ஒரு விக்கெட் மட்டுமே தேவையானதாக இருக்கும்” என்றும், ”மைதானத்திற்கு வரும் 1.3 லட்சம் இந்திய ரசிகர்களை அமைதியாக்குவதை விட பெரிய விசயம் வேறொன்றும் இருக்காது” என்றும் தெரிவித்திருந்தார். பின்னர், சொன்னதை போன்றே செய்துகாட்டிய பாட் கம்மின்ஸ், விராட் கோலியின் விக்கெட்டை அவரே எடுத்து, மைதானத்தில் இருந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய ரசிகர்களை அமைதியாக்கினார்.
தற்போது தி ஏஜ் பத்திரிகைக்கு கம்மின்ஸ் அளித்திருக்கும் பேட்டியில், "அவரிடம் 70 வயதில் உங்களின் மரணப்படுக்கையின் போது ஒரு கிரிக்கெட் தருணத்தை நினைவுகூறவேண்டும் என்றால் எதை நினைவு கூறுவீர்கள்" என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்திருக்கும் கம்மின்ஸ், “அது 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நான் வீழ்த்திய விராட் கோலி விக்கெட் தான். அந்த தருணத்தில் நான் மிகவும் உந்தப்பட்டதாக நினைக்கிறேன். விராட் கோலியின் விக்கெட்டுக்குப் பிறகு நாங்கள் களத்தில் பேசிக்கொண்டிருந்தோம், அப்போது ஸ்டீவ் ஸ்மித் , 'நண்பர்களே, ஒரு நொடி சுற்றி கூட்டத்தை பாருங்கள்' என்று கூறினார். நாங்கள் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு சுற்றிலும் பார்த்தோம். அந்த இடைவெளியில், மைதானம் ஒரு நூலகம் போல அமைதியாக இருந்தது. அங்கிருந்த 1 லட்சம் இந்தியர்களும் சிறு சத்தம் கூட இல்லாமல் அமைதியாக இருந்தனர். நான் அந்த தருணத்தை நீண்ட நேரம் ரசித்தேன்” என்று கம்மின்ஸ் கூறியுள்ளார்.