rachin - maxwell - jadeja
rachin - maxwell - jadejaCricket Australia

கேப்டனாக கோலி! உலகக்கோப்பையின் சிறந்த Playing 11-ஐ அறிவித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா - இவர் இல்லையா?

நடப்பு உலகக்கோப்பையின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், மிகப்பெரிய தொடரின் சிறந்த அணியை ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
Published on

2023 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளன. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிக்கா அணிகள் தலா 2 போட்டிகளில் தோல்வியும், நியூசிலாந்து 4 போட்டிகளில் தோல்வியும் சந்தித்திருக்கும் நிலையில், இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் 9-0 என ஆதிக்கம் செலுத்திவருகிறது.

இந்நிலையில் லீக் போட்டி முடிந்ததும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்திருக்கும் தொடரின் சிறந்த அணியில் 4 இந்திய வீரர்கள் இடம்பிடித்து அசத்தியுள்ளனர். இதன்மூலம் நடப்பு உலகக்கோப்பையில் இந்திய வீரர்கள் எந்தளவு ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்பது தெரியவருகிறது.

கேப்டனாக கோலி! - 2023 உலகக்கோப்பையின் சிறந்த அணி!

குயின்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா): ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் டிகாக், 9 போட்டிகளில் 65.67 சராசரியுடன் 591 ரன்கள் எடுத்து அசத்திவருகிறார். ஒரு தென்னாப்பிரிக்க வீரராக அதிக உலகக்கோப்பை (4) சதங்கள் அடித்திருக்கும் டிகாக், அதிகபட்ச ஸ்கோராக 174 அடித்துள்ளார்.

டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா): மீண்டும் தன்னுடைய பிரைம் ஃபார்முக்கு திரும்பியிருக்கும் வார்னர் தொடக்க வீரராக கலக்கிவருகிறார். 9 போட்டிகளில் 55.44 சராசரி மற்றும் 105.5 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 499 ரன்கள் எடுத்துள்ளார். 2 சதங்கள் மற்றும் 2 அரைசதங்கள் அடித்திருக்கும் வார்னரின் அதிகபட்ச ஸ்கோர் 163 ஆகும்.

Rachin
Rachin

ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து): 23 வயதான நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவிந்திரா சச்சினின் உலக சாதனைகளை முறியடித்து ஒரு கனவு உலகக்கோப்பையில் மிளிர்ந்து வருகிறார். இந்த இளம்புயல் 9 போட்டிகளில் 70.63 ஸ்ட்ரைக் ரேட்டில் 565 ரன்கள் குவித்துள்ளார். லீக் முடிவில் 3 சதம் மற்றும் 2 அரை சதங்களையும் அடித்திருக்கும் ரச்சின், 5.68 என்ற எகானமி விகிதத்தில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

விராட் கோலி (கேப்டன்): 99.00 சராசரியுடன் 594 ரன்கள் குவித்திருக்கும் கிங் கோலி, இதுவரை 2 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் அடித்துள்ளார். நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராகவும் முதலிடத்தில் நீடிக்கிறார்.

எய்டன் மார்க்ரம் (தென்னாப்பிரிக்கா): சில போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை வழிநடத்திய மார்க்ரம், 49.50 சராசரி மற்றும் 114.50 ஸ்ட்ரைக் ரேட்டில் 396 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்கள் அடித்துள்ளார்.

கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா): ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் உலகக் கோப்பை வரலாற்றில் தனது இடத்தை சில நேர்த்தியான ஆட்டங்களால் உறுதிப்படுத்தியுள்ளார். 7 போட்டிகளில் 152.7 ஸ்ட்ரைக் ரேட்டில் 397 ரன்கள் குவித்திருக்கும் மேக்ஸ்வெல், தன்னுடைய பெயரில் ஒரு இரட்டை சதத்தையும் எழுதியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பந்து வீச்சில் 4.95 என்ற எகானமி விகிதத்தில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

maxwell
maxwellTwitter

மார்கோ யான்சன் (தென்னாப்பிரிக்கா): நடப்பு உலகக்கோப்பையின் சிறந்த ஆல்ரவுண்டராக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் யான்சன், 8 போட்டிகளில் 111.3 ஸ்ட்ரைக் ரேட்டில் ஒரு அரைசதத்துடன் 157 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் பந்து வீச்சில் 6.40 என்ற எகானமி ரேட்டில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

ரவீந்திர ஜடேஜா (இந்தியா): இந்திய ஆல்ரவுண்டர் 9 போட்டிகளில் 115.6 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 111 ரன்கள் எடுத்துள்ளார். பந்து வீச்சில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் ஜடேஜா, 3.96 என்ற ஈர்க்கக்கூடிய பொருளாதார விகிதத்தில் கலக்கி வருகிறார்.

முகமது ஷமி (இந்தியா): 5 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தாலும், இந்த உலகக் கோப்பையில் 4.78 என்ற பொருளாதார விகிதத்தில் ஷமி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரராக வலும்வருகிறார்.

ஆடம் ஜம்பா (ஆஸ்திரேலியா): ஆஸி. ஸ்பின்னர் 9 போட்டிகளில் 22 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக மாறி, அடுத்த ஆஸ்திரேலிய உலகக் கோப்பைக்கு தீ வைத்துள்ளார். அவர் இதுவரை 5.27 என்ற சிறந்த பொருளாதார வீதத்தையும் பெற்றுள்ளார்.

Mohammed Shami
Mohammed Shami

ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா): 17 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் இருக்கும் பும்ரா, 3.65 என்ற எகானமி ரேட்டில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.

தில்ஷன் மதுஷங்க (இலங்கை): இந்தப் பட்டியலில் 12வது வீரராக இருக்கும் மதுஷங்கா, 9 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அரையிறுதிக்கு தகுதி பெறாத இலங்கை அணியில் தரமான தாக்குதலை வெளிப்படுத்திய ஒரே வீரர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com