5-0.. சேஸிங் மறந்துபோச்சு மேடம்! ருதுராஜ் அதிரடியில் சென்னையில் அஸ்தமனமான SRH! வரலாறு படைத்த தோனி!

பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது சென்னை அணி.
சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ்
சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ்முகநூல்

நடப்பு ஐபிஎல் தொடரில் எந்தவிதமான அணிக்கு எதிராகவும் அச்சுறுத்தல் தரும் ஒரு அணியாக சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி வலம்வருகிறது. கடந்த 6 போட்டிகளில் 277 ரன்கள், 287 ரன்கள், 266 ரன்கள் என மூன்றுமுறை 250 ரன்களுக்கு மேல் அடித்து மிரட்டிவரும் SRH அணி, பயமில்லாத ஒரு பிராண்ட் ஆஃப் கிரிக்கெட்டை விளையாடிவருகிறது. அந்த அணியின் டாப் 5 வீரர்கள் அனைவரும் 200 ஸ்டிரைக்ரேட்டில் விளையாடும் வீரர்களாக, எதிரணி பவுலர்களுக்கு நிம்மதி இல்லா இரவை பரிசளித்துவருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு நிலைத்திருக்க வேண்டிய போட்டியில் மொரட்டு அணியான சன்ரைசர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் வெல்லாவிட்டால், சிஎஸ்கே அணிக்கு பெரும் பாதகமாக அமையும் என்பதால் “எப்படியாது பாட் கம்மின்ஸை சைலண்ட் ஆக்கிடுங்க பா” என்ற எதிர்ப்பார்ப்போடு சிஎஸ்கே ரசிகர்கள் சேப்பாக்கத்திற்கு படையெடுத்தனர். மைதானத்தில் இருந்த ரசிகர்கள் “உங்களால் சென்னை ரசிகர்களை சைலன்ஸ் ஆக்கமுடியாது” என்ற பதாகைகளோடு வெற்றியை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ்
இதான் ரியல் RCB.. இவ்வளவு நாளா எங்கப்பா இருந்திங்க? ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜாக்ஸ்! அசத்தல் வெற்றி!

இரண்டு பலம் வாய்ந்த அணிகளுக்கு இடையேயான போட்டி என்பதால், டாஸ் வெல்வது பெரிய விசயமாக பார்க்கப்பட்டது. ஆனால் எப்போதும் போல ருதுராஜ் டாஸ் வெல்வதில் கோட்டை விட, டாஸ் வென்ற பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வுசெய்யாமல் பந்துவீச்சை தேர்வுசெய்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். “உங்களுக்கு தான் சேஸிங் வராதே பா” என ஐபிஎல் ரசிகர்கள் ஷாக் ஆக, சன்ரைசர்ஸ் அணி நம்பிக்கையுடன் பந்துவீசியது.

98 ரன்கள் குவித்த ருதுராஜ்.. கலக்கிய மிட்செல்..

சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய SRH அணி, விரைவாகவே தொடக்க வீரர் ரஹானேவை வெளியேற்றி சென்னை அணியை டைட்டாகவே வைத்திருந்தது. உடன் மூன்றாவது வீரராக களமிறங்கிய டேரில் மிட்செல்லும் டொக் வைத்து விளையாட, இவங்கள நம்புனா வேளைக்கு ஆகாது என அதிரடிக்கு திரும்பிய கேப்டன் ருதுராஜ், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ்
28 முறை அடிக்கப்பட்ட 200+ டோட்டல்.. பவுலர்கள் மேல் கருணையே இல்லையா? ஜாம்பவான்களின் குற்றச்சாட்டு !

ஒரு ஓவருக்கு இரண்டு மூன்று பவுண்டரிகளை விரட்டிய ருதுராஜ், 7 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்டி 27 பந்தில் அரைசதத்தை எடுத்துவர, பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த மிட்செல் மார்ஸ் 32 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்டு 52 ரன்கள் அடித்து அசத்தினார். ”அந்த மொட்டைய எதுக்கு பா டீம்ல வச்சிருக்கிங்க, ரொம்ப உசுர வாங்குறாரு பா இந்த மிட்செல்” என சென்னை ரசிகர்களாலாயே ட்ரோல் செய்யப்பட்ட மிட்செல், தன்னை பேக்கப்-செய்த சிஎஸ்கே அணிக்காக ஒரு தரமான நாக் விளையாடி கலக்கிப்போட்டார்.

மிட்செல் அரைசதமடித்து வெளியேற, களத்திலிருந்த ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் ஒரு மாயாஜாலமே நிகழ்த்தினார். 10 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என அனைத்து திசையிலும் பந்தை தெறிக்கவிட்ட ருதுராஜ், சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார். “யார் யாரையோ உலகக்கோப்பைக்கு எடுத்துட்டு போறிங்க இவரையும் எடுத்துட்டு போங்க பா” என ருதுராஜ் ரசிகர்கள் புலம்பவே ஆரம்பித்துவிட்டனர். அந்தளவு ஒரு தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திவருகிறார் ருதுராஜ். ஒருபுறம் சேப்பாக் ராஜாவாக கலக்கிய ருதுராஜ் 98 ரன்னில் சதத்தை தவறவிட்டு வெளியேற, களத்திற்கு வந்த ஷிவம் துபே ”ஆறுச்சாமியாக மாறி” 4 சிக்சர்களை பறக்கவிட்டு கெத்துகாட்டினார். கடைசி நேரத்தில் ஒரு Fire நாக் ஆடிய ஷிவம் துபே சென்னை அணியை 212 ரன்களுக்கு எடுத்துச்சென்றார். கடைசியாக களத்திற்கு வந்த தோனி பவுண்டரியுடன் 7முறையாக தன்னுடைய ஆட்டத்தை நாட்-அவுட்டில் முடித்துக்கொண்டார்.

எல்லாம் துஷார் தேஸ்பாண்டே மயம்..

213 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் அணி களமிறங்க, ”என்ன செய்ய காத்திருக்காங்களோ” என்ற பீதியிலேயே தொடங்கியது போட்டி. எப்போதும் போல தொடக்கமே 3 சிக்சர்களுடன் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் வானவேடிக்கையுடன் தொடங்கினர். ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஒரே ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் மற்றும் அன்மோல்ப்ரீத் சிங் இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றிய துஷார் தேஸ்பாண்டே கலக்கிப்போட்டார். உடன் அபிஷேக் சர்மாவும் 11 ரன்னில் நடையை கட்ட, 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய துஷார் தேஸ்பாண்டே பவுலர் ஆஃப் தி டேவாக மாறினார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிதிஸ் ரெட்டியுடன் கைக்கோர்த்த எய்டன் மார்க்ரம், அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை விரட்டி ரன்களை எடுத்துவந்தார். ஆனால் மார்க்ரமின் ஸ்டம்புகளை தகர்ந்தெறிந்த பதிரானா, அதிரடி வீரர் க்ளாசனையும் வெளியேற்றி சன்ரைசர்ஸ் அணியின் நம்பிக்கையை உடைத்தெறிந்தார்.

சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ்
2010-ல் தோனி.. 2024-ல் சாம்சன்! அதே கர்ஜனை.. அதே எமோசன்! இது WC தேர்வுக்குழுவுக்கு அடித்த அடி!

அதற்கு பிறகு வந்த ஒரு பேட்டர்களும் சோபிக்காத நிலையில், “உங்கள போய் பெரிய ரவுடினு நினைச்சு பயந்துட்டோமே” என சிஎஸ்கே ரசிகர்கள் குதூகலித்தனர். ”சேஸிங் எப்படி பன்றதுனு மறந்துபோச்சு மேடம்” என்ற ரேஞ்சுக்கு படுமோசமாக ஆடிய சன்ரைசர்ஸ் அணி, 19வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

வரலாறு படைத்த தோனி!

ஒரு அசத்தலான வெற்றிக்கு பிறகு புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திலிருந்த சென்னை அணி 3வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்த வெற்றியுடன் ஐபிஎல் வராலாற்றில் 150 ஐபிஎல் போட்டிகளை வென்ற முதல்வீரர் என்ற மைல்கல் சாதனையை படைத்துள்ளார் மகேந்திர சிங் தோனி. சேப்பாக்கத்தில் இதுவரை 5 போட்டிகளில் மோதியுள்ள சன்ரைசர்ஸ் அணி, ஒரு போட்டியில் கூட வென்றதில்லை என்ற மோசமான ரெக்கார்டை தொடர்கிறது. இந்த ஒரேபோட்டியில் 5 கேட்ச்களை பிடித்த டேரில் மிட்செல் பிரத்யேக பட்டியலில் முகமது நபியுடன் இரண்டாவது வீரராக தன்னை இணைத்துக்கொண்டார்.

போட்டிக்கு பிறகு பேசிய ருதுராஜ் கெய்க்வாட், சதம் தவறிபோனதை விட சென்னை அணிக்கு 230 ரன்களை எடுத்துவர முடியாமல் போனது தான் வருத்தமளிப்பதாக தெரிவித்தார். தனியொரு ஆளாக போராடிவரும் ருதுராஜ் கெய்க்வாட், தொடர்ந்து சென்னை அணிக்காக அனைத்தையும் செய்துவருகிறார். எப்படி பார்த்தாலும் இன்னைக்கு சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com