சிதைந்ததா கேப்டன் கனவு.. மும்பை இந்தியன்ஸை Unfollow செய்தாரா பும்ரா? - பின்னணி என்ன?

கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா இட்டுள்ள ஒரு பதிவு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசு பொருளாகியுள்ளது.

சில சமயங்களில் அமைதி காப்பதே சிறந்த பதில் என இன்ஸ்டாகிராமில் ஜஸ்பிரித் பும்ரா பதிவிட்டுள்ளார். இந்த ஒற்றை வரி பதிவு ரசிகர்களிடையே புதிர், கவலை, அதிர்ச்சி, வியப்பு என பல வகை உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

Bumrah
Bumrah

ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணிக்கு திரும்பியுள்ள நிலையில் இப்பதிவு கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. இதோடு இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்வதில் இருந்தும் பும்ரா வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் பரவியுள்ளன.

MI-க்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா!

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை 2 ஆண்டுகளுக்கு முன் குஜராத் டைட்டன்ஸ் பெரும் தொகை கொடுத்து கொத்திச்சென்றது. பாண்டியா தலைமையிலான குஜராத் அணி 2022இல் ஐபிஎல் பட்டம் வென்றதுடன் 2023இல் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

Hardik Pandya
Hardik PandyaICC

இந்த சூழலில் சற்றும் எதிர்பாராத வகையில் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் மீண்டும் தன் வசப்படுத்தியுள்ளது. இதற்கு பாண்டியாவுக்கு மிகப்பெரிய தொகையை மும்பை இந்தியன்ஸ் கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பும்ராவிற்கு ஏற்பட்ட ஏமாற்றம்!

ரோகித் சர்மாவை தொடர்ந்து பாண்டியாவை கேப்டனாக்கும் எண்ணத்தில்தான் அவர் அழைத்து வரப்பட்டுள்ளார் என்றும் யூகங்கள் எழுந்தன. இந்த நிலையில்தான் ஜஸ்பிரித் பும்ராவின் பூடகமான பதிவு சமூக ஊடகங்களில் கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதப்பொருளாகியுள்ளது. அடுத்து வரும் ஐபிஎல் ஏலம் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவு காட்டுவதாக பலர் பதிவிட்டு வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த கேப்டனாகும் கனவில் இருந்த பும்ராவுக்கு பாண்டியாவின் வருகை ஏமாற்றம் தருவதாக சிலர் பதிவிட்டுள்ளனர்.

bumrah
bumrahICC

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அயர்லாந்துக்கு எதிராக பும்ரா தலைமையில் டி20 தொடரில் விளையாடிய இந்திய அணி 2 - 0 என்ற கணக்கில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் இவ்விவகாரத்தில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகமோ பும்ராவோ அதிகாரபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com