9 முறை 5 விக்கெட்டுகள்! வெளிநாட்டு மண்ணில் பும்ரா அசத்தல் சாதனை! இந்தியாவிற்கு 79 ரன்கள் இலக்கு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ஜஸ்பிரித் பும்ரா அசத்தியுள்ளார்.
bumrah
bumrahX

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டி கேப்டவுன் நகரில் நேற்று தொடங்கியது.

122 வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் 23 விக்கெட்டுகள்!

நேற்றைய தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியானது பந்துவீச்சாளர்களுக்கான நாளாகவே மாறியது. போட்டிப்போட்டு விக்கெட்டுகளை அள்ளிய இரண்டு அணி பந்துவீச்சாளர்களும் முதல் நாளிலேயே 23 விக்கெட்டுகளை அள்ளினர்.

siraj
siraj

முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி முகமது சிராஜின் 6 விக்கெட்டுகள் இன்னிங்ஸால் 55 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா பதிவுசெய்த மோசமான டோட்டலாக இது மாறியது. பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்தியாவிற்கு எதிராக லுங்கி இங்கிடி, ரபாடா மற்றும் பர்கர் மூன்று பந்துவீச்சாளர்களும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்த, இந்தியா 153 ரன்களுக்கே ஆல்அவுட்டானது.

ind vs sa
ind vs sa

தொடர்ந்து தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. இதன்மூலம் ஒரே நாளில் 23 விக்கெட்டுகளை பதிவுசெய்த இந்த ஆட்டமானது, 1902-ம் ஆண்டுக்கு பிறகு அதிக விக்கெட்டுகளை பதிவுசெய்த முதல் நாள் ஆட்டமாக பதிவானது.

9வது முறையாக 5 விக்கெட்டுகளை அள்ளிய பும்ரா!

62/3 என்ற நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி, பும்ராவின் அசத்தலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. என்னதான் ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் 17 பவுண்டரிகள், 2 சிச்கர்களை விளாசி சதமடித்து அசத்தினார்.

markram
markram

106 ரன்னில் இருந்த அவரை முகமது சிராஜ் வெளியேற்றினார். 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்கா, இந்திய அணி வெற்றிபெறுவதற்கு 78 ரன்களை பதிவுசெய்துள்ளது. அற்புதமாக பந்துவீசிய பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9வது முறையாக 5 விக்கெட்டுகளை பதிவுசெய்து அசத்தியுள்ளார் பும்ரா. அதுமட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்கா மண்ணில் 3வது முறையாக 5 விக்கெட்டுகளை பதிவுசெய்துள்ள அவர், அதிகமுறை (3) பதிவுசெய்த ஜவகல் ஸ்ரீநாத் சாதனையை சமன்செய்துள்ளார். தென்னாப்பிரிக்கா மண்ணில் ஜவகல் ஸ்ரீநாத் 43 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், பும்ரா 38 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

வெளிநாட்டு மண்ணில் அதிகமுறை 5 விக்கெட்டுகள்!

9 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள ஜஸ்பிரித் பும்ரா, அதில் 8 முறை வெளிநாட்டு ஆடுகளங்களில் மட்டுமே நிகழ்த்தி அசத்தியுள்ளார். 3 முறை தென்னாப்பிரிக்காவிலும், 2 முறை இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ், ஒருமுறை ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் நிகழ்த்தியுள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற 79 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடவிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com