வடிவேலு காமெடி பாணியில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைத்த பும்ரா! நக்கலா? வேதனை பதிவா?

நம்பர் 1 டெஸ்ட் பவுலராக மாறிய பிறகு பும்ரா ஒரு வித்தியாசமான பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பும்ரா
பும்ராX

இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் விரைவாகவே 150 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆசிய வேகப்பந்துவீச்சாளர்களில் இம்ரான் கான் மற்றும் சோயப் அக்தரின் சாதனைகளை முறியடித்தார். அதுமட்டுமல்லாமல் இந்த சாதனையை படைக்கும் முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.

பும்ரா
உலக டெஸ்ட் தரவரிசையில் பும்ரா முதலிடம்! 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதல் வேகப்பந்துவீச்சாளர்!

இந்த இமாலய சாதனைக்கு பிறகு நேற்று வெளியிடப்பட்ட ஐசிசி உலக டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஜஸ்பிரித் பும்ரா, 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கும் முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். அதுமட்டுமல்லாமல் உலக கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட், ஒடிஐ மற்றும் டி20 என மூன்றுவடிவ கிரிக்கெட்டிலும் முதல் இடத்தை பிடித்து முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற உலக சாதனையையும் படைத்து மிரட்சியை ஏற்படுத்தினார்.

இதற்காக பும்ராவிற்கு அனைத்து தரப்பினரிடமும் இருந்து வாழ்த்துக்கள் கூறப்பட்டது. வாழ்த்தில் மகிழ்ச்சி அடைந்த போதும் “வாழ்த்து கூற இத்தனை பேர் இருக்கிறார்கள், ஆனால் போட்டியை காணவந்து ஆதரவளிக்க ஒருவர் கூட இல்லை” என்ற தன்னுடைய வேதனையை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக வைத்துள்ளார்.

வடிவேலு பாணியில் பும்ரா பதிவுசெய்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி!

தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ஒருபக்கம் கூட்டமே இல்லாத ஸ்டேடியம், மறுபக்கம் கூட்டம் நிரம்பிவழியும் ஸ்டேடியம் என இரண்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் பும்ரா. அதில் கூட்டம் நிறைந்த பகுதியில் இருப்பவர்கள் வாழ்த்து தெரிவிப்பவர்கள் என்றும், கூட்டம் இல்லாத பக்கத்தில் இருப்பவர்கள் நேரில் வந்து ஆதரவளிப்பவர்கள் என்றும் பதிவிட்டுள்ளார் அவர்.

பும்ரா இன்ஸ்டாகிராம் ஸ்டோரி
பும்ரா இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

12 பி படத்தில் வரும் வடிவேலு காமெடியான, ‘என்னங்கப்பா பஸ்ஸூக்கு வெளில இவ்ளோ பேர் இருக்கீங்க, ஆனா உள்ளுக்குள்ள யாருமே ஏற மாட்றீங்க...’ என்பதுபோல இந்த ஸ்டோரி இருக்கிறதென நெட்டிசன்கள் சிலாகித்து வருகின்றனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறவிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com