”கோலி, ரோகித் இல்லாமலும் இந்தியாவிடம் சிறந்த 11 இருக்கிறது..” – ENG வேகப்பந்துவீச்சாளர்!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி நாளை லீட்ஸின் ஹெடிங்லியில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா-இங்கிலாந்து பங்கேற்கப்போகிறது என்ற மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தநிலையில், ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு இந்தியாவை சரிசமமான போட்டியாளராக இல்லாமல் சற்று கீழிறக்கியுள்ளது.
இந்த சூழலில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் போன்றவர்கள் விராட்-ரோகித் இல்லாததால் இந்தியாவிற்கு இருக்கும் பாதகமான சூழல் குறித்து பேசியிருந்த நிலையில், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் பிரைடன் கார்ஸ் இந்திய அணி இன்னும் பலமானதாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்திய அணி சிறந்த 11 வீரர்களை கொண்டுள்ளது..
நடக்கவிருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர் பிரைடன் கார்ஸ் ஒரு அங்கமாக இடம்பெற்றுள்ளார்.
இந்த சூழலில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி குறித்து பேசியிருக்கும் அவர், “வெளிப்படையாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இல்லாதது இந்தியாவின் பேட்டிங் வரிசைக்கு மிகப்பெரிய இழப்பு தான். அவர்கள் இருவரும் பல ஆண்டு அனுபவம் கொண்ட உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள்.
ஆனால் அவர்கள் இல்லாதபோதும் இந்திய கிரிக்கெட்டின் ஆழம் மற்றும் தரம் சிறப்பாகவே இருக்கிறது. இரண்டு பெரிய வீரர்கள் இல்லாமல் வருவதால், அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் வலுவான 11 கொண்டே களம்காண்பார்கள். மேலும் அவர்கள் எவ்வளவு சவாலை கொண்டுவந்தாலும் நாங்கள் அதற்கு தயாராகவே இருக்கிறோம்” என்று கூறியிருப்பதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.