"இந்திய அணி எங்களுக்கு நெருக்கடி கொடுத்து பின்தங்கவைத்துவிட்டது" - இங்கிலாந்து கோச் மெக்கல்லம்..!

நானும் அணியின் கேப்டனும் எங்கள் அணுகுமுறையில் மிகவும் திடமாகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறோம். அதிலிருந்து நாங்கள் பின்வாங்குவதாக இல்லை. அதை நாங்கள் நிச்சயம் மேம்படுத்த முயற்சி செய்வோமோ தவிர, அதிலிருந்து பின்வாங்கமாட்டோம்.
brendon mccullum
brendon mccullumAP

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என வென்றது இந்தியா. 'Bazball' பற்றிய எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக இருந்த நிலையில், இங்கிலாந்து அணியால் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. முதல் போட்டியை வென்று வெற்றிகரமாக தொடரைத் தொடங்கியிருந்தாலும், அடுத்தடுத்த 4 போட்டிகளையும் தோற்று சொதப்பியது இங்கிலாந்து. இந்தத் தொடர் பற்றி சமீபத்தில் பேசிய இங்கிலாந்து பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம், இந்திய அணி தங்கள் அணுகுமுறை மூலம் இங்கிலாந்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது என்று கூறியிருக்கிறார்.

"சில நேரங்களில் நீங்கள் உங்கள் தவறுகளில் இருந்து தப்பித்துவிடுவீர்கள். ஆனால், தொடரின் கடைசி கட்டத்தில் உங்கள் தவறுகள் அப்பட்டமாகத் தெரியத் தொடங்கும்போது எதுவும் செய்ய முடியாது. ஆழமாக சிந்தித்து உங்கள் ஆட்டத்தில் சில மாற்றங்கள் செய்யவேண்டும். அதன்மூலம் தான் நாங்கள் நம்பிய விஷயங்களுக்கு உண்மையாக இருக்க முடியும். உண்மையைச் சொல்லவேண்டுமானால் தொடர் போகப்போக நாங்கள் கொஞ்சம் பயப்படத் தொடங்கினோம். இந்திய வீரர்கள் எங்களுக்குத் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார்கள். பந்துவீச்சில் மட்டுமல்ல, பேட்டிங்கிலும் எங்களுக்கு அதீத நெருக்கடியை ஏற்படுத்தினார்கள்" என்று கூறினார் மெக்கல்லம்.

மேலும், "ராஜ்கோட் மற்றும் ராஞ்சியில் நடந்த போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக கம்பேக் கொடுத்து வென்றது. சில நல்ல வாய்ப்புகள் கிடைத்தபோதும் அதைக் கோட்டை விட்டது இங்கிலாந்து. அந்தப் போட்டிகள் பற்றிப் பேசிய மெக்கல்லம், "அவ்விரு போட்டிகளில் நாங்கள் அதீத நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டோம். நாங்கள் அந்தப் போட்டிகளில் ஒருகட்டத்தில் நல்ல நிலைமையில் தான் இருந்தோம். அதை எங்களால் சரியாகப் பயன்படுத்தி ஆட்டத்தைக் கையில் எடுக்க முடியவில்லை. ஒருவேளை அதுவே தொடக்கத்தில் எங்களுக்கு இல்லாத சந்தேகத்தை மனதுக்குள் விதைத்திருக்கலாம். அது ஏன் அந்தக் கட்டத்தில் ஏற்பட்டது என்பதையும் கூட என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்களின் அணுகுமுறை மூலம் அவர்கள் எங்களைப் பின்தங்கவைத்துவிட்டார்கள்" என்றும் கூறினார் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் பயிற்சியாளர்.

"ஒருசில விஷயங்களில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். அதைவைத்து நீங்கள் சில கதவுகளைத் தட்டி வாய்ப்புகளை ஏற்படுத்துவீர்கள். அதுவும் நாங்கள் இந்தியாவில் சந்தித்ததது போன்ற சவாலை சந்தித்தால், உடனடியாக ஒருசில விஷயங்களில் முன்னேற்றம் காணவேண்டும். அடுத்த சில மாதங்களில் எங்கள் திட்டமெல்லாம் அந்த முன்னேற்றத்தை அடைவதில் தான் இருக்கும். சம்மர் வரும்போது நாங்கள் இப்போது எப்படி இருக்கிறோமோ, அதைவிட சிறந்த வெர்ஷனாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்" என்று தங்கள் திட்டம் பற்றிக் கூறினார் மெக்கல்லம்.

"இதுவரை நாங்கள் நம்பியிருந்த விஷயத்தை விட்டுவிட்டு வேறு ஏதோவொன்றைத் தேடிப் போனால் அது முட்டாள்தனமாக இருக்கும். நானும் அணியின் கேப்டனும் எங்கள் அணுகுமுறையில் மிகவும் திடமாகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறோம். அதிலிருந்து நாங்கள் பின்வாங்குவதாக இல்லை. அதை நாங்கள் நிச்சயம் மேம்படுத்த முயற்சி செய்வோமோ தவிர, அதிலிருந்து பின்வாங்கமாட்டோம். அதோடு ஒவ்வொரு வீரரிடமிருந்தும் அவர்களின் சிறப்பான செயல்பாட்டைக் கொண்டுவர முயற்சி செய்வோம். இந்தியாவுக்கு வந்தபோது நாங்கள் என்ன சாதிக்கவேண்டும் என்று நினைத்தோமோ, அது எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இந்தத் தொடரிலிருந்து பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. அதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன். எந்தெந்த இடங்களில் நாங்கள் முன்னேற்றம் காணவேண்டும் என்பதை முடிவு செய்து அதை நோக்கி நாங்கள் நகரவேண்டும்" என்று கூறினார்.

இந்தத் தொடரின்போது இங்கிலாந்து அணியின் முன்னணி ஸ்பின்னர் ஜேக் லீக் முழங்கால் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். அதேசமயம் இளம் ஸ்பின்னர்கள் டாம் ஹார்ட்லி, ஷோயப் பஷீர் இருவரும் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்துக்கு நம்பிக்கையாக விளங்கினார்கள். அவர்களின் எழுச்சி இப்போது அணியில் லீச்சின் இடத்தையே கூட கேள்விக்குறியாக்கியிருக்கிறது. இதுபற்றியும் மெக்கல்லமிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதில் கொடுத்த மெக்கல்லம், "ஜேக் லீச் அவரே இதைப் பற்றிப் புரிந்துகொள்வார். அவருமே இதைப் பெருமையாகவே கருதுவார். ஏனெனில் அவர் அணியின் நலனில் அதிக அக்கறை கொண்டவர். இங்கிலாந்து அணியின் நம்பர் 1 ஸ்பின்னராக இருக்கவேண்டும் என்று அவர் விரும்பினாலும், மற்றவர்களின் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டவர். பஷீர் அணியில் இணைந்தபோது அவரை போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தது லீச் தான். ஹார்ட்லி, ரெஹான் ஆகியோருடன் அவர் பணியாற்றிய விதம் பிரமிக்கவைப்பதாக இருந்தது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com