
இந்தியாவில் 13வது ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனினும், பலரால் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி பல்வேறு விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் மத்தியில் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதில்லை என்ற பெருமையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டது.
குறிப்பாக, இந்தப் போட்டியைக் காண பல்வேறு பிரபலங்களும் வந்திருந்தனர். பாலிவுட், கோலிவுட், டோலிவுட் சினிமா பிரபலங்களும் மைதானத்தில் நிறைந்திருந்தனர். இந்தப் போட்டியை, பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா கண்டுகளித்தார்.
இவர், தமிழில் சரவணன் அருள் நடித்த ‘லெஜண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியின்போது, தனது 24 கேரட் தங்க ஐபோனை தொலைத்துவிட்டதாக ஊர்வசி தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்திலும் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், ’அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் போனை தொலைத்துவிட்டேன். யாராவது கண்டெடுத்தால் விரைவில் என்னைத் தொடர்புகொள்ளவும்’ எனப் பதிவிட்டிருந்த அவர், அகமதாபாத் போலீஸுக்கும் அதை டேக் செய்திருந்தார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த ஐபோன் கிடைக்கப் பெற்றுள்ளது. இதுகுறித்த தகவலையும் நடிகை ஊர்வசி ரவுடேலா பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவருக்கு வந்துள்ள மின்னஞ்சலில் (அக்.16), ’உங்களுடைய ஐபோன் என்னிடம் உள்ளது. இது உங்களுக்கு வேண்டுமென்றால், என் சகோதரனை புற்றுநோயிலிருந்து காப்பாற்ற நீங்கள் எனக்கு உதவ வேண்டும்’ என அதில் தகவல் இடம்பெற்றுள்ளது. இந்த மின்னஞ்சலுக்கு பதிலளித்திருக்கும் ஊர்வசி, தம்ஸ் அப் வழங்கியுள்ளார். மேலும், ஐபோனை கண்டுபிடித்து தந்தவருக்கு நிதி உதவி அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.