விழிச்சவால் உடைய பெண்கள் t20 world cup.. ஆஸியை எளிதில் சுருட்டி பைனலுக்குள் நுழைந்த இந்தியா!
விழிச்சவால் உடைய பெண்கள் கலந்துகொள்ளும் முதல் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
விழிச்சவால் உடைய பெண்கள் கலந்துகொள்ளும் முதல் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தற்போது நடைபெற்று வருகிறது. இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய ஆறு அணிகள் கலந்துகொண்ட இந்த தொடர், கடந்த நவம்பர் 11ஆம் தேதி டெல்லியில் தொடங்கியது. பெங்களூருவில் நடைபெற்ற சில போட்டிகளுக்குப் பிறகு, நாக் அவுட்களுக்கான போட்டிகள் தற்போது இலங்கை தலைநகர் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே லீக் போட்டிகளில், இலங்கை மற்றும் அமெரிக்காவை 10 விக்கெட்கள் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவை209 ரன்கள் வித்தியாசத்திலும், நேபாளத்தை 85 ரன்கள் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
இதையடுத்து இன்று கொழும்புவில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அவ்வணியில் சங்கன் புக்காலோ 34 ரன்கள் எடுத்தார். பின்னர் 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் பசந்தி ஹன்சடாவும் கங்கா காதமும் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு இழுத்துச் சென்றனர். பசந்தி ஹன்சடா 45 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் கங்கா காதம் ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெற வைத்தார். அவருக்கு துணையாக கருணா 16 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 11.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றதுடன், முதல் உலகக்கோப்பையிலேயே இறுதிப்போட்டிக்குள்ளும் நுழைந்துள்ளது.

