இந்திய வீரர்கள் BAT-ல் ரப்பர் பகுதி..? "நான் அப்படி பேசவில்லை.." இலங்கை வீரர் விளக்கம்!
இந்திய வீரர்கள் பயன்படுத்தும் பேட்களில் ரப்பர் பகுதி இணைக்கப்பட்டுள்ளது என்று கூறிய பனுகா ராஜபக்ச, தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் திறமையை பாராட்டியதாகவும், அவர்களின் உபகரணங்கள் உலக தரத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய கிரிக்கெட்டில் இருபது ஓவர் போட்டிகளில் உலகமே அஞ்சும் அணியாக இந்திய கிரிக்கெட் அணி திகழ்ந்து வருகிறது. ஆடும் 11 பேர் தவிர வேறு 11 வீரர்களை மற்றொரு அணியாக உலககோப்பைக்கு அனுப்பினால் கூட அந்த அணியும் அரையிறுதி வரை முன்னேறும் திறமை கொண்டது என உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
எதிரணி 300 ரன்களை குவித்தால் கூட அதனை வெற்றிகரமாக துரத்தும் அளவு இந்திய பேட்டிங் வலுவாக உள்ளது. அதனால் தான் அமெரிக்காவிற்கு எதிரான முதல் உலகக்கோப்பை போட்டியின் போது கூட, இந்தியா 300 ரன்கள் அடிக்கும் என முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் டேல் ஸ்டெயின் பதிவிட்டிருந்தார்.
ஆனால், இந்திய வீரர்களின் இந்த திறமைக்கு அவர்களின் பேட்தான் காரணம் என இலங்கை அணியின் சர்வதேச வீரர் பனுகா ராஜபக்ச பேசியிருந்தார். அதாவது இந்திய வீரர்கள் பயன்படுத்தும் பேட்களில் ரப்பர் பகுதி இணைக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் தான் அவர்களால் சிறப்பாக விளையாட முடிகிறது என்றும், அதை மற்ற நாட்டு வீரர்களால் வாங்க முடியாது எனவும் பேசியிருந்தார்.
அவரின் இந்த பேச்சு விமர்சனத்தை பெற்றது, மேலும் இந்திய ரசிகர்கள் கடுமையான எதிர்வினையாற்றினர். இந்தசூழலில் தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் கொடுத்துள்ளார்.
நான் பேசியது பாராட்டுக்குரியது..
இந்திய வீரர்கள் பேட்டில் ரப்பர் இருக்கிறது என்று பேசிய கருத்திற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தன்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், பகுதியாக மட்டும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார்.
எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கும் பனுகா ராஜபக்ச, “நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது, எனது கருத்து முழுக்க பாராட்டுக்குரியது. இந்திய கிரிக்கெட் அதன் உள்கட்டமைப்பு முதல் உபகரணத் தரநிலைகள் வரை நம்பமுடியாத அளவிற்கு முன்னேறியுள்ளது. அவர்களின் பேட் உற்பத்தியாளர்கள் உண்மையிலேயே உலகின் சிறந்த உற்பத்தியாளர்களில் ஒருவர்.
நான் தெளிவாக இதை விளக்கியிருக்க வேண்டும், இந்திய கிரிக்கெட்டின் மீது எப்போதும் மரியாதையைத் தவிர வேறு எதுவும் இல்லை” என விளக்கம் கொடுத்துள்ளார்.

