சிறந்த டெஸ்ட் டீம் - 2023
சிறந்த டெஸ்ட் டீம் - 2023புதிய தலைமுறை

Rewind 2023 | 2023ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் டீமில் யாருக்கெல்லாம் இடம்?

2023ம் ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டது. பல அட்டகாசமான போட்டிகளை நாம் கண்டுகளித்திருக்கிறோம். அதுவும் டெஸ்ட் போட்டிகளில் உலக டெஸ்ட் சாம்பியன், ஆஷஸ் என பல முக்கியமான பிரம்மாண்டமான தொடர்களும் நடந்ததிருக்கின்றன.

இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக டெஸ்ட் அரங்கில் சிறப்பாக செயல்பட்ட 11 வீரர்களை ஒன்றுதிரட்டி ஒரு பிளேயிங் லெவனை உருவாக்கியிருக்கிறோம். இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியாக நாம் தேர்வு செய்வது இதுதான்

1. உஸ்மான் கவாஜா, ஆஸ்திரேலியா

உஸ்மான் கவாஜா
உஸ்மான் கவாஜா

இந்த ஆண்டு டெஸ்ட் அரங்கில் ஆயிரம் ரன்களைக் கடந்த ஒரே வீரர் உஸ்மான் கவாஜா தான். 13 போட்டிகளில் விளையாடிய அவர், 1210 ரன்கள் குவித்திருக்கிறார்.

3 சதங்கள், 6 அரைசதங்கள் என அடித்து விளாசியிருக்கிறார் கவாஜா. தென்னாப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து என மிகவும் கடினமான இடங்களிலெல்லாம் சதம் அடித்து அசத்தியிருக்கிறார் கவாஜா. இந்த சதங்கள், ரன்களையெல்லாம் விட உலக அமைதியை வலியுறுத்தவேண்டும் என்று ஐசிசி-யுடன் மல்லுக்கட்டும் அந்த குணத்துக்காகவே அவரைக் கொண்டாடவேண்டும்.

2. ஜேக் கிராலி, இங்கிலாந்து

ஜேக் கிராலி, இங்கிலாந்து
ஜேக் கிராலி, இங்கிலாந்து

கவாஜாவைப் போல் இன்னொரு ஓப்பனரை அப்படி சட்டென்று தேர்வு செய்துவிட முடியாது. ரோஹித் ஷர்மா, திமுத் கருணரத்னே, கிராலி ஆகியோர் நிச்சயம் இந்த ஸ்லாட்டுக்கு தகுந்தவர்கள் தான். இவர்களுள் கருணரத்னே தான் அதிக ரன் அடித்தவர் என்றாலும், அவருடைய பெரும் பகுதி ரன்கள் அயர்லாந்துக்கு எதிராக வந்தவை.

ரோஹித்தும் ஆஸ்திரேலியா & தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக ஆடிய 10 இன்னிங்ஸ்களில் ஒருமுறை மட்டுமே அரைசதம் கடந்திருக்கிறார். ஆஷஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்டு அசத்திய கிராலி தான் நமது சாய்ஸ். இந்த ஆண்டு 43 என்ற நல்ல சராசரி வைத்திருப்பது மட்டுமல்லாமல் 88.46 என்ற சூப்பர் ஸ்டிரைக் ரேட்டில் (606 ரன்கள்) ஆடியிருக்கிறார் அவர்.

3. கேன் வில்லியம்சன், நியூசிலாந்து

57.91 என்ற சராசரியில் இந்த ஆண்டு 695 ரன்கள் விளாசியிருக்கிறார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். வெல்லிங்டனில் இலங்கைக்கு எதிராக இரட்டை சதம் அடித்து மிரட்டினார் கேன்.

ஆனால், அதையெல்லாம் விட கிறைஸ்ட்சர்ச்சில் மிகவும் இக்கட்டான நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் அடித்த 121 ரன்கள், இந்த ஆண்டின் மிகச் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. தனி ஆளாகப் போராடி அந்தப் போட்டியில் தோல்வியைத் தவிர்த்ததோடு மட்டுமல்லாமல், அந்த அணியை வெற்றியும் பெறவைத்தார் வில்லியம்சன்.

4. ஜோ ரூட், இங்கிலாந்து

இங்கிலாந்து அணி பாஸ்பால் அணுகுமுறையை நம்பிக்கையாகக் கையாள மிகமுக்கிய காரணம் இந்த நங்கூரம் தான். இக்கட்டான நிலையிலெல்லாம் ஓரளவாவது நிலைத்து நின்று போராடியிருக்கிறார்.

முன்பை விட அதிரடியாக ஆடி 76.33 என்ற ஸ்டிரைக் ரேட் வைத்திருந்தாலும், 65.58 என்ற சராசரியில் இந்த ஆண்டை சிறப்பாக முடித்திருக்கிறார் ரூட். போதாதற்கு இந்த ஆண்டு 8 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார் அவர். அவருடைய இந்த சராசரியும், பௌலிங்குமே விராட் கோலியை இந்த அணியிலிருந்து வெளியே அமரவைத்திருக்கின்றன.

5. டிராவிஸ் ஹெட், ஆஸ்திரேலியா

டிராவிஸ் ஹெட், ஆஸ்திரேலியா
டிராவிஸ் ஹெட், ஆஸ்திரேலியா

டிராவிஸ் ஹெட்டை எந்த அணியில் சேர்ப்பதற்கும் காரணம் சொல்லத் தேவையில்லை. அவர் இருக்கும் ஃபார்முக்கு அவரை இந்திய அணியில் கூட இணைக்க ரசிகர்கள் தயாராகத்தான் இருப்பார்கள். 1 சதம், 5 அரைசதம் அடித்து அசத்திய அவர், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோற்பதற்கும் காரணமாக அமைந்தார். இந்த ஆண்டு மட்டும் 12 போட்டிகளில் 919 ரன்கள் எடுத்திருக்கிறார் ஹெட்.

6. ரவீந்திர ஜடேஜா, இந்தியா

ரவீந்திர ஜடேஜா, இந்தியா
ரவீந்திர ஜடேஜா, இந்தியா

35.12 என்ற சராசரியில் 281 ரன்கள் எடுத்திருக்கும் ஜடேஜா பந்துவீச்சில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். 7 போட்டிகளில் 33 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார் அவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டும் 26 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார் ஜடேஜா. டெல்லியில் மட்டுமே 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருந்தார் அவர்.

7. டாம் பிளண்டல், நியூசிலாந்து

டாம் பிளண்டல், நியூசிலாந்து
டாம் பிளண்டல், நியூசிலாந்து

அணிக்கு எப்படியும் ஒரு விக்கெட் கீப்பர் வேண்டுமே... அதனால் டாம் பிளண்டல். 13 இன்னிங்ஸ்களில் 433 ரன்கள் எடுத்திருக்கும் அவர், 36.08 என்ற சராசரியில் ஆடியிருக்கிறார். மற்ற விக்கெட் கீப்பர்கள் இந்த ஆண்டு பெரிய சோபிக்காததால், பிளண்டலுக்கு இந்த ஆண்டுக்கான அணியில் இடம் கிடைக்கிறது.

8. ரவிச்சந்திரன் அஷ்வின், இந்தியா

ரவிச்சந்திரன் அஷ்வின், இந்தியா
ரவிச்சந்திரன் அஷ்வின், இந்தியா

ஆஃப் ஸ்பின்னருக்கான ஸ்லாட்டுக்கு அஷ்வின், நாதன் லயன் இருவருக்கும் எப்போதும் போல் இந்த ஆண்டும் கடும் போட்டி உண்டு. 47 விக்கெட்டுகளோடு இந்த ஆண்டின் டாப் விக்கெட் டேக்கராக திகழ்கிறார் லயான். ஆனால் அவரை விட சிறந்த சராசரி, ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் அஷ்வினும் கூட 41 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். பேட்டிங்கிலும் கூட ஒரு அரைசதம் அடித்திருக்கிறார் ஆஷ். இந்தக் காரணங்களால் அஷ்வின் லயானை முந்தி இந்த அணியில் இடம் பிடிக்கிறார்.

9. பேட் கம்மின்ஸ், ஆஸ்திரேலியா

பேட் கம்மின்ஸ், ஆஸ்திரேலியா
பேட் கம்மின்ஸ், ஆஸ்திரேலியா

இந்த ஆண்டு கம்மின்ஸின் ஆண்டு. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி, ஆஷஸ் வெற்றி, ஒருநாள் உலகக் கோப்பை வெற்றி என அவர் தொட்டதெல்லாம் கோப்பைகளில் முடிந்துகொண்டிருக்கிறது. அணியை முன் நின்று வழிநடத்தும் அவர், ஆஸ்திரேலியாவின் எழுச்சிக்குப் பின்னால் பெரும் தூணாய் நிற்கிறார். விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலிலும் இந்த ஆண்டு 11 போட்டிகளில் 42 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார் கம்மின்ஸ். இந்த அணிக்கும் கேப்டன் அவர்தான்.

10. மிட்செல் ஸ்டார்க், ஆஸ்திரேலியா

மிட்செல் ஸ்டார்க், ஆஸ்திரேலியா
மிட்செல் ஸ்டார்க், ஆஸ்திரேலியா

கம்மின்ஸ் போல் ஸ்டார்க்குக்கும் இது ஒரு சிறந்த ஆண்டாக அமைந்திருக்கிறது. 9 போட்டிகளில் 38 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் ஸ்டார்க். அதுவும் 39.97 என்ற ஸ்டிரைக் ரேட்டில். ஒரு சிறந்த விக்கெட் டேக்கராக திகழ்ந்திருக்கிறார் ஸ்டார்க். ஆஷஸ் தொடரில் விளையாடிய 4 போட்டிகளிலேயே 23 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார் அவர்.

11. ஸ்டுவர்ட் பிராட், இங்கிலாந்து

ஸ்டுவர்ட் பிராட், இங்கிலாந்து
ஸ்டுவர்ட் பிராட், இங்கிலாந்து

தன் கடைசி ஆண்டில் ஒரு அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்துச் சென்றிருக்கிறார் ஸ்டுவர்ட் பிராட். 2023ல் மட்டும் எட்டே போட்டிகளில் 38 விக்கெட்டுகள் எடுத்தார் அவர். இந்த ஆஷஸ் தொடரில் 22 விக்கெட்டுகள் எடுத்தவர், ஒட்டுமொத்தமாக ஆஷஸில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற மகத்தான சாதனையும் படைத்து விடைபெற்றிருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com