இந்திய அணியின் புதிய டைட்டில் ஸ்பான்சர் ’அப்பல்லோ டயர்ஸ்’.. ரூ.579 கோடிக்கு பிசிசிஐ ஒப்பந்தம்!
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக பிரபல ஆன்லைன் சூதாட்டச் செயலியான ட்ரீம் 11 நிறுவனம் இருந்து வந்தது. அண்மையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டச் செயலிகள் தடைச் சட்டம் அமலுக்கு வந்ததால், இந்திய அணியின் ஜெர்ஸி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து ட்ரீம் 11 நிறுவனம் விலகியது.
அதாவது 2023ஆம் ஆண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ரூ.358 கோடிக்கு ட்ரீம் 11 உடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்திருந்தது. இதன்படி, பிசிசிஐக்கு ஆண்டுக்கு ரூ.119 கோடி வருவாய் கிடைத்தது. இந்த ஒப்பந்தம் 2026 வரை நீடிக்கவிருந்தது. ஆனால் மத்திய அரசின் சட்டம் காரணமாக அந்த ஒப்பந்தத்திலிருந்து முன்கூட்டியே விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் ட்ரீம் 11 விலகியதால், இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஸ்பான்சரை பிசிசிஐ தீவிரமாக தேடி வந்தது. இதற்கான அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ, இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 16-ஐ கடைசி நாளாக அறிவித்திருந்தது.
இந்தசூழலில் இந்திய அணியின் ஸ்பான்சர்ஷிப் உரிமையை அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. மும்முனைப் போட்டியாக இருந்த நிலயில், 579 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து வெற்றி பெற்றுள்ளது அப்பல்லோ டயர்ஸ்.
புதிய ஸ்பான்சர் அப்பல்லோ டயர்ஸ்..
இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சருக்கான போட்டி அப்பல்லோ டயர்ஸ், கான்வா மற்றும் ஜேகே சிமண்ட்ஸ் நிறுவனங்களுக்கு இடையே போட்டியாக இருந்துள்ளது. இதில் கான்வாவின் 544 கோடி ரூபாய் மற்றும் ஜேகே சிமண்ட்ஸின் 477 கோடி ரூபாய் ஏலத்தை முறியடித்த அப்பல்லோ டயர்ஸ் 579 கோடிக்கு ஏலத்தை வென்றுள்ளதாக கிறிக்பஸ் தெரிவித்துள்ளது. இது முந்தைய ட்ரீம் 11 நிறுவனத்தின் ஒரு போட்டிக்கு 4 கோடி ரூபாய் என்ற கட்டணத்தை விட, ஒரு போட்டிக்கு 4.7 கோடி ரூபாய் ஸ்பான்சரை குறிப்பதாக சொல்லப்படுகிறது.
அரியானா மாநிலம் குருகிராமை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம், 2028-ம் ஆண்டு மார்ச் வரை 2½ ஆண்டு கால ஒப்பந்தத்தில் பிசிசிஐ உடன் ரூ.579 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் 121 இருதரப்பு போட்டிகளுக்கும், 21 ஐசிசி போட்டிகளுக்கும் ஸ்பான்சர்களை வழங்கும் என தெரிகிறது.
விரைவில் இந்தியா ஏ அணியில் அப்பல்லோ டயர்ஸ் ஜெர்ஸியை பார்க்கலாம் என்றும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி அப்பல்லோ டயர்ஸ் ஸ்பான்சர்ஸ் ஜெர்ஸியை அணிவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.