”பேட்டே பிடிக்காதவர் ஜெய் ஷா” - முஸ்தாபிசுர் விவகாரத்தில் இந்தியாவைச் சாடிய Ex BCB நிர்வாகி!
”ஆசியாவில் கிரிக்கெட் நிர்வாகம் அரசியல்வாதிகளால் கடத்தப்பட்டுள்ளது” என வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரியுமான சையத் அஷ்ரபுல் ஹக் தெரிவித்திருப்பது மேலும் புயலைக் கிளப்பியுள்ளது.
ஐபிஎல் தொடரின் கே.கே.ஆர். அணியிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதற்கு அந்நாட்டில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தவுள்ள டி20 உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்கு பயணம் செய்வதில்லை என்ற முடிவில் வங்கதேசம் உறுதியாக உள்ளது. இது, மேலும்மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் விரிசலை அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து இதுதொடர்பாக விவாதங்கள் வைக்கப்படுவது கிரிக்கெட் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில், ”ஆசியாவில் கிரிக்கெட் நிர்வாகம் அரசியல்வாதிகளால் கடத்தப்பட்டுள்ளது” என வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரியுமான சையத் அஷ்ரபுல் ஹக் தெரிவித்திருப்பது மேலும் புயலைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து அவர், ”இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் என எல்லா இடங்களிலும் உள்ள முழு கிரிக்கெட் சூழலும் அரசியல்வாதிகளால் கடத்தப்பட்டுள்ளது. சற்று யோசித்துப் பாருங்கள். ஜக்மோகன் டால்மியா, ஐ.எஸ்.பிந்த்ரா, மாதவ்ராவ் சிந்தியா, என்.கே.பி. சால்வே, என். ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் பொறுப்பில் இருந்திருந்தால் இது எப்போதாவது நடந்திருக்குமா? அவர்கள் முதிர்ச்சியடைந்தவர்கள் என்பதால் இது ஒருபோதும் நடந்திருக்காது. அவர்கள் விளையாட்டைப் புரிந்துகொண்டார்கள், அதன் தாக்கங்களையும் புரிந்துகொண்டார்கள். ஆனால், இப்போது அது முழுவதுமாக கடத்தப்பட்டுள்ளது. உங்களிடம் ஒருபோதும் மட்டையைப் பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். உங்கள் விஷயத்தில், ஜெய் ஷா இருக்கிறார், அவர் ஒரு போட்டியில்கூட கிரிக்கெட் மட்டையைப் பிடித்ததில்லை. எங்கள் விளையாட்டு ஆலோசகர் வங்கதேசம் இந்தியாவுக்குச் செல்லக்கூடாது என்று ஒரு அறிக்கையை வழங்குகிறார்.
யோசித்துப் பாருங்கள். இது ஒரு உலகக் கோப்பை நிகழ்வு. இது ஐபிஎல் அல்ல. ஐபிஎல் ஓர் உள்நாட்டுப் போட்டி. இது ஒரு சர்வதேச உலகக் கோப்பை நிகழ்வு. இதுபோன்ற அவசரமான அறிக்கைகளை நீங்கள் வெளியிட முடியாது. முஸ்தாஃபிசூருக்குப் பதிலாக, லிட்டன் தாஸோ அல்லது சௌமியா சர்க்காரோ நீக்கப்பட்டிருப்பார்களா? அவர்கள் அதைச் செய்யமாட்டார்கள். அரசியல்வாதிகள் விளையாடுவது எல்லாம் மலிவான மத உணர்வு. முதிர்ச்சியற்ற அரசியல்வாதிகள் ஆட்சியைப் பிடிக்கும்போது இதுதான் நடக்கும். மேற்கு வங்கம் மற்றும் அசாமில் தேர்தல்கள் உள்ளன, எனவே வாக்குகளைப் பெற இந்த அரசியலை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். மேலும் உலகக் கோப்பை அந்தஸ்துள்ள ஒரு சர்வதேச நிகழ்வை சிக்கலில் ஆழ்த்துகிறீர்கள்" என கடுமையாக சாடியுள்ளார். அவருடைய இந்த கடுமையான விமர்சனம் கிரிக்கெட் வல்லுநர்களிடம் ஆழ்ந்த கவலையை எழுப்பியுள்ளது. தவிர, வங்கதேச அணியினரின் எதிர்கால கிரிக்கெட் வாழ்வையும் சிக்கலுக்கு உண்டாக்கியுள்ளது.

