Pak vs Ned: 1996-ல் பாகிஸ்தானுக்கு எதிராக தந்தை வாங்கிய அடி! 27 வருடங்கள் கழித்து பழிதீர்த்த மகன்!

நெதர்லாந்தை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.
Bas de Leede
Bas de LeedeTwitter

உலகக்கோப்பையின் சில போட்டிகள்தான் காலம் கடந்த பின்னும் அழியாமல் நின்று பேசும். அப்படியான போட்டிகளில் பந்துவீச்சாளர் அல்லது பேட்ஸ்மேன் என யாரோ ஒருவர் போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தி கெத்து காட்டுவார்கள். அதுவரை யாரென்றே தெரியாமல் இருந்த அவர்கள், தங்களுக்கான ஒரு அடையாளத்தை பிடித்து ஹீரோவாக உருவெடுப்பார்கள். அப்படியான சம்பவங்களில்தான் வீரர்களின் தனித்திறன் வெளிப்படும்.

இங்கு ஒரு நெதர்லாந்து வீரர் 27 வருடங்களுக்கு முன் தன்னுடைய தந்தை சந்தித்த மோசமான ஆட்டத்திற்கு பதிலடி கொடுத்து ஹீரோவாக நின்றுள்ளார்.

சிறப்பான பந்துவீச்சு தாக்குதல் மூலம் பாகிஸ்தானை கலங்கடித்த நெதர்லாந்து!

2023 ஒருநாள் உலகக்கோப்பையின் இரண்டாவது போட்டியானது பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. ‘நெதர்லாந்து அணி தானே ...பாகிஸ்தான் எளிதாக வென்றுவிடும்’ என்றுதான், எல்லோரும் நினைத்திருப்பார்கள். ஆனால் இங்கு ஆட்டமே தலைகீழாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்கத்திலேயே ஓப்பனர் ஃபகர் ஷமான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார்கள் நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் உலகின் நம்பர் 1 வீரராக இருக்கும் பாபர் அசாம் 18 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அந்தளவு தரமான பந்துவீச்சு தாக்குதலை நெதர்லாந்து வெளிப்படுத்தியது.

babar
babar

38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பாகிஸ்தான் அணிக்கு, விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் மற்றும் ஷகீல் இருவரும் நம்பிக்கை அளித்தனர். சிக்சர், பவுண்டரிகளாக விரட்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள், நெதர்லாந்து பவுலர்கள் மீது அழுத்தத்தை திருப்பி போட்டனர். 4வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடி அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்து அசத்தியது. இந்த கூட்டணியை பிரிக்க என்ன செய்வதென்று திணறிய போதுதான் “பாஸ் டி லீடே” பந்துவீச வந்தார்.

Rizwan
Rizwan

68 ரன்கள் அடித்து களத்தில் திடமாக இருந்த முகமது ரிஸ்வானை ஒரு தந்திரமான பந்தின் மூலம் போல்டாக்கி வெளியேற்றினார் லீடே. உடன் 68 ரன்னில் இருந்த ஷகீலை, ஆர்யன் வெளியேற்ற அதற்கு பிறகான ஆட்டத்தை நெதர்லாந்து பவுலர் லீடே கையில் எடுத்தார். பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் தூண்களான இஃப்திகார் அகமது, ஷதாப் கான் மற்றும் ஹசன் அலி 3 பேரையும் அடுத்தடுத்து வெளியேற்றி கெத்துகாட்டிய லீடே, பாகிஸ்தானை 286 ரன்களுக்கு கட்டுப்படுத்தினார். அதுவரை பாகிஸ்தான் வீரர்களுக்கு தெரியவில்லை பேட்டிங்கிலும் லீடேதான் பெரிய தலைவலியாக வந்து நிற்க போகிறார் என்று.

தனியொரு ஆளாக கெத்து காட்டிய லீடே!

287 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணி, தரமான பந்துவீச்சு தாக்குதலை கொண்ட பாகிஸ்தான் பவுலர்களிடம் விரைவாகவே 2 விக்கெட்டுகளை இழந்தது. அதற்கு பிறகுதான் களத்திற்கு வந்தார் லீடே. “அண்ணே இவன் மறுபடியும் வந்துட்டான் ண்ணே” என பாகிஸ்தான் பவுலர்கள் பார்க்க, “இருங்கப்பா எனக்கும் ஒரு மாதிரிதான் இருக்கு” என முழித்து கொண்டிருந்தார் பாபர் அசாம்.

leede
leede

ஆனால் வந்த வேலையை தரமாக செய்ய ஆரம்பித்த லீடே, பாகிஸ்தானின் நட்சத்திர பவுலரான ஹாரிஸ் ராஃப் ஓவரில் அசால்ட்டாக ஒரு சிக்சரை பறக்கவிட்டு கெத்துகாட்டினார். கடந்த டி20 உலகக்கோப்பையில் ஹாரிஸ் ராஃப் வீசிய பந்தில் தான் லீடேவிற்கு காயம் ஏற்பட்டது. ஆனால் நான் பழைய லீடே இல்லை என சிக்சரை பறக்கவிட்டு ஹாரிஸ் ராஃபை பார்த்து சிரித்தார் லீடே.

leede
leede

லீடே மற்றும் விக்ரம்ஜித் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, நெதர்லாந்து அணி கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டத்திற்குள் வந்தது. 6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என துவம்சம் செய்த லீடே அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் இருந்த விக்ரம்ஜித்தும் 50 ரன்களை கடக்க, பாகிஸ்தான் அணி விக்கெட்டை தேடியது. ஒருவழியாக 24வது ஓவரில் விக்ரம்ஜித்தை 52 ரன்னில் வெளியேற்றினார் ஷதாப் கான். அவ்வளவுதான் இந்த ஜோடியை பிரித்ததும் அடுத்து வந்த நெதர்லாந்து வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

leede
leede

விக்கெட்டுகள் விழுந்தாலும் தனியொரு ஆளாக களத்தில் போராடிய லீடே, நெதர்லாந்து ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தார். ஆனால் ஒரு சிறப்பான டெலிவரி மூலம் லீடேவை 67 ரன்னில் வெளியேற்றிய முகமது நவாஸ், நெதர்லாந்து ஆட்டத்தை முடித்துவைத்தார். இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நெதர்லாந்து அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

தந்தை சந்தித்த மோசமான தோல்விக்கு பழிதீர்த்த மகன்!

பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள், பேட்டிங்கில் 67 ரன்கள் என உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்திய லீடே, அனைவரது நெஞ்சிலும் ஹீரோவாக நின்றுவிட்டார். இவருடைய தந்தையான டிம் டி லீடே 1996 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 19 டாட் பந்துகளை சந்தித்து 0 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். மூன்றாம் நிலை வீரராக இருந்தும் ஒரு மோசமான ஆட்டத்தை சந்தித்த தந்தைக்காக 27 வருடங்கள் கழித்து வந்து பழி தீர்த்துள்ளார், அவருடைய மகனான பாஸ் டி லீடே.

ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக இருந்த லீடேவின் தந்தை 2003 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். அதில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட்டின் விக்கெட்டுகளும் அடக்கம். தந்தையை போலவே தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக மகனும் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

leede
leede

அதுமட்டுமில்லாமல் பாஸ் டி லீடேவின் ரோல் மாடல் இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலிதான். இதை அவரே முன்னதாக தெரிவித்திருந்தார். தன்னுடைய idol-ஐ போலவே சிஷ்யனும் பாகிஸ்தானை பஞ்சராக்கியுள்ளார். இந்த நெதர்லாந்து வீரருக்கு நிச்சயம் அடுத்த ஐபிஎல்லில் அதிக டிமேண்ட் இருக்க போகிறது.

இந்திய மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான்!

நெதர்லாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணி இந்திய மண்ணில் தன்னுடைய முதல் உலகக்கோப்பை வெற்றியை பதிவு செய்தது.

Bas de Leede
2023 உலகக் கோப்பை: இங்கிலாந்தை பழி தீர்த்த நியூசிலாந்து...! நேற்றைய போட்டியின் சில சுவாரசியங்கள்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com