
2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. முதலிரண்டு போட்டிகளில் அபார வெற்றிபெற்ற நியூசிலாந்து அணியும், ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் வங்கதேச அணியும் இன்றையப் போட்டியில் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. காயத்தால் அவதிப்பட்டு வந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், பெரிய இடைவெளிக்கு பிறகு இந்தப் போட்டியில் மூலம் களமிறங்கியுள்ளார்.
டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்ய, வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. போட்டியின் முதல் பந்திலேயே லிட்டன் தாசை டக் அவுட்டில் வெளியேற்றினார் டிரெண்ட் போல்ட். பின்னர் கைக்கோர்த்த தன்சித்தும் மெஹிதியும் ரன்களை எடுத்துவர, அதிக நேரம் இந்த ஜோடியை விளையாடவிடாத நியூசிலாந்து பவுலர்கள் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 56 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி தடுமாறியது.
5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் முஸ்பிகுர் ரஹிம் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். நியூசிலாந்து பவுலர்களை சிக்சர், பவுண்டரிகளாக விரட்டிய இந்த ஜோடி வேகமாக ரன்களை எடுத்துவந்தது. 6வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடியை 3 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 40 ரன்னில் இருந்த கேப்டன் ஷாகிப்பை வெளியேற்றி பிரித்து வைத்தார் பெர்குஷன். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரஹிம் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 66 ரன்கள் அடித்து வெளியேறினார். 50 ஓவர் முடிவில் முகதுல்லாவின் அதிரடியின் உதவியால் வங்கதேச அணி 245 ரன்கள் சேர்த்துள்ளது.
96 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டதன் மூலம் உலகக்கோப்பையில் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் அடித்த பட்டியலில் இந்திய இணையான சச்சின் மற்றும் சேவாக் ஜோடியை பின்னுக்கு தள்ளியுள்ளது இந்த வங்கதேச ஜோடி. 19 இன்னிங்ஸ்களில் ஒன்றாக விளையாடியிருக்கும் முஸ்பிகுர் ரஹிம் மற்றும் ஷாகிப் அல்ஹசன் இருவரும் 972 ரன்களை பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் 20 இன்னிங்ஸ்களில் 971 ரன்கள் பார்ட்னர்ஷிப்புடன் இருந்த சச்சின்-சேவாக் ரெக்கார்டை முறியடித்துள்ளனர்.
இந்த பட்டியலில் 20 இன்னிங்ஸ்களில் 1220 ரன்களுடன் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மேத்யூ ஹைடன் முதலிடத்தில் இருக்கின்றனர். இவர்களுக்கு பிறகு இரண்டாவது இடத்தில் ஷாகிப் மற்றும் ரஹிம் நீடிக்கின்றனர்.
ஒருநாள் உலகக்கோப்பையில் 8 முறை 50+ ரன்களை பதிவு செய்திருக்கும் ரஹிம் மற்றும் ஷாகிப் ஜோடி, அதிக 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டவர்களில் சச்சின்-சேவாக்கை சமன் செய்துள்ளனர். முதலிடத்தில் 12 முறை 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கில்கிறிஸ்ட் மற்றும் ஹைடன் அடித்துள்ளனர்.