
2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. 13வது உலகக் கோப்பைத் தொடரான இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுவரை நடந்த உலகக் கோப்பைகளின் சிறந்த தருணங்களை சற்று அசைபோடுவோம். ஆனால் சொல்லப்போனால் இந்த சம்பவம் இந்திய ரசிகர்கள் அசைபோட நினைக்கும் விஷயமே இல்லை. ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகரும் மறக்க நினைக்கும் உலகக் கோப்பை சம்பவம் - 2007 உலகக் கோப்பை!
2007 உலகக் கோப்பையை இந்திய அணி பெரும் நம்பிக்கையோடு எதிர்கொண்டது. முந்தைய உலகக் கோப்பையை இறுதிப் போட்டி வரை சென்று தவறவிட்ட இந்திய அணி, இம்முறை எப்படியும் கோப்பையை வென்றுவிடும் என்று ரசிகர்கள் நம்பினார்கள். அதற்கு ஏற்ப அணி முழுக்க சூப்பர் ஸ்டார்களும் நிறைந்திருந்தார்கள். ஆனால் முதல் போட்டியிலேயே ரசிகர்கள் நெஞ்சில் இடியை இறக்கினர் இந்திய வீரர்கள்.
மார்ச் 17 - வங்கதேசத்துக்கு எதிராக அந்த உலகக் கோப்பையைத் தொடங்கியது இந்திய அணி. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். நல்ல தொடக்கத்தை எதிர்பார்த்திருந்த இந்திய அணிக்கு மூன்றாவது ஓவரிலேயே அதிர்ச்சி கொடுத்தார் மஷ்ரஃபீ மொர்டாசா. 2 ரன்கள் எடுத்திருந்த சேவாக் அவர் பந்தில் போல்டாகி வெளியேறினார். ஆனால் அதிர்ச்சி அதோடு நிற்கவில்லை. அடுத்து வந்த உத்தப்பாவையும் (9 ரன்கள்) வெளியேற்றினார் மொர்டாசா. கிரெக் சேப்பலின் புரட்சிகளுள் ஒன்றாக, நான்காவது வீரராகக் களமிறங்கினார் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். புகழ்பெற்ற கங்குலி - சச்சின் பார்ட்னர்ஷிப் இந்தியாவை அந்த சிறு சரிவிலிருந்து மீட்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அப்துர் ரசாக் சுழலில் வீழ்ந்தார் சச்சின். மற்றொரு ஸ்பின்னர் முகமது ரஃபீக், கேப்டன் டிராவிட்டை பெவிலியனுக்கு அனுப்பினார்.
விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும், முடிந்தவரை பொறுமையாக விளையாடி களத்தில் நீடித்தார் முன்னாள் கேப்டன் கங்குலி. அவரோடு இணைந்து யுவ்ராஜ் சிங்கும் சிறப்பாக விளையாட, ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் உருவெடுத்தது. மிகவும் பொறுமையாக விளையாடிய கங்குலி 104 பந்துகளில் அரைசதம் கடந்தார். சற்று அதிரடியாக ஆடிய யுவி, அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் 47 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு கங்குலி - யுவ்ராஜ் இணை 85 ரன்கள் எடுத்தது. அடுத்த ஓவரில் கங்குலியும் ஆட்டமிழக்க இந்திய ரசிகர்களின் நம்பிக்கை உடைந்தது. எப்படியோ கடைசி விக்கெட்டுக்கு ஜஹீர் கானும், முனாஃப் படேலும் சற்று சிறப்பாக விளையாடி 32 ரன்கள் சேர்த்ததால், இந்தியா 191 ரன்கள் எடுத்தது. மொர்டாசா 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
இந்திய பௌலர்கள் எப்படியேனும் போராடி வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஹாரியார் நஃபீஸை ஜஹீர் கான் சீக்கிரம் வெளியேற்றிருந்தாலும், இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தமீம் இக்பால், முஷ்ஃபிகுர் ரஹீம் இருவரும் இந்திய பௌலர்களை சிறப்பாகக் கையாண்டார்கள். அதிரடியாக ஆடிய தமீம் 53 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருந்தாலும் இந்திய அணியால் இந்தப் போட்டியில் கம்பேக் கொடுக்க முடியவில்லை. முஷ்ஃபிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன் ஆகியோரும் அரைசதம் அடிக்க, 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது வங்கதேசம். அதன்மூலம் உலகக் கோப்பை அரங்கில் இந்தியாவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை பரிசளித்தது. இந்திய ரசிகர்களின் இதயம் நொறுங்கிப்போனது.
ஆரம்பமே மோசமாக அமைந்த இந்திய அணி அடுத்த போட்டியில் பெர்முடாவைப் பந்தாடியது. முதல் முறையாக ஒருநாள் அரங்கில் 400 ரன்களையும் கடந்தது இந்தியா. இந்தியா அந்தப் போட்டியில் 413 ரன்கள், அப்போது உலகக் கோப்பையின் அதிகபட்ச ஸ்கோராகப் பதிவானது.
அந்த உலகக் கோப்பையில் தொடரில் 16 அணிகள் என்பதால் 4 குரூப்பில் 4 அணிகள் இடம்பெற்றிருந்தன. அதனால் ஒரு அணிக்கு மூன்றே லீக் போட்டிகள் என்ற நிலை. ஒவ்வொரு தவறும் பெரிதாக மாறும். அப்படித்தான் அந்த வங்கதேச தோல்வி இந்திய அணிக்கு அமைந்தது. இலங்கைக்கு எதிராகக் கட்டாயம் வெல்லவேண்டும் என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது இந்தியா. ஆனால் அந்தப் போட்டியை 69 ரன்களில் தோற்றது டிராவிட்டின் அணி. இந்தப் போட்டியில் இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமில் நம் வீரர்கள் சோகமாக இருக்கும் புகைப்படம் இப்போதும் நம் கண் முன் வந்துபோகும். ஒருவேளை பெர்முடா வங்கதேசத்தை வென்றால் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற நப்பாசையில் ரசிகர்கள் இருக்க, வங்கதேசத்திடம் மொத்தமாக சரண்டர் ஆனது பெர்முடா. இந்தியா உலகக் கோப்பையில் இருந்து குரூப் சுற்றோடு வெளியேற்றப்பட்டது! அந்த உலகக் கோப்பை இந்தியர்களின் மிகமோசமான நினைவாக மாறியது!