“அவங்கள அடிக்க முடியாது..அதனால”-நெதர்லாந்து தோல்விக்காக செருப்பால் அடித்துக்கொண்ட வங்கதேச ரசிகர்கள்!

நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் வங்கதேச அணி தோல்வியுற்றதை ஏற்றுக்கொள்ள முடியாத வங்கதேச ரசிகர்கள், மைதானத்திலேயே விரக்தியை வெளிப்படுத்திய வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
Bangladesh Fans
Bangladesh FansTwitter

ஈடன் கார்டனில் நடைபெற்ற வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில், முதலில் பந்துவீசிய வங்கதேச அணி அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. வங்கதேசத்தின் தரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாத நெதர்லாந்து அணி, 107 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எப்படியும் விரைவாகவே ஆல் அவுட்டாகி விடும் என நினைத்த போது நிலைத்துநின்ற விளையாடிய நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ், 89 பந்துகளில் 68 ரன்கள் குவித்து நெதர்லாந்து அணியை 229 ரன்களுக்கு எடுத்துச்சென்றார்.

Ban vs Ned
Ban vs Ned

230 ரன்கள் தானே எப்படியும் வங்கதேச அணி வெற்றிபெற்றுவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், நெதர்லாந்து அணி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. முக்கியமாக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வான் மீக்ரன் கேப்டன் ஷாகிப், ரஹிம் முதலிய வீரர்களை ஓரிலக்க ரன்களில் வெளியேற்றி அசத்தினார். 35 ரன்கள் அடித்த மெஹிதி ஹாசனை தவிர வேறு எந்த வங்கதேச வீரரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வான் மீக்ரனின் அற்புதமான பந்துவீச்சில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி 142 ரன்னில் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.

விரக்தியில் செருப்பால் அடித்துக்கொண்ட ரசிகர்!

வங்கதேச அணியின் உலகக்கோப்பை போட்டியை காண இந்தியாவிற்கு வந்த வங்கதேச ரசிகர்களுக்கு ஹோட்டல்கள் கிடைக்காமல் அதிகமான சிரமத்திற்கு உள்ளாகினர். சிலர் தங்க இடம் கிடைக்காமல் அப்படியே போட்டியை காண காத்திருந்து மைதானம் வந்தனர். தன் நாட்டின் விளையாட்டை காண பல்வேறு இன்னல்களை கடந்துவந்த ரசிகர்களுக்கு, ஒரு சிறிய அணியிடம் வங்கதேசம் தோல்வியுற்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏமாற்றத்தின் உச்சிக்கே சென்ற சில ரசிகர்கள் மைதானத்திலேயே விரக்தியை வெளிப்படுத்தினர். தோல்வியை ஜீரணிக்க முடியாத ஒரு வங்கதேச ரசிகர் தன்னைத்தானே செருப்பால அடித்துக்கொள்ளும் வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

செருப்பால் அடித்துக்கொண்டவர்களில் ஒரு ரசிகர் பேசுகையில், “பெரிய அணிகளிடம் தோல்வியடைவதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. ஆனால் நெதர்லாந்திடம் எப்படி தோற்பது? இந்த ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்களால் வீரர்களை அடிக்க முடியாது, அதனால் அவர்களுக்கு பதிலாக நான் என்னை அறைந்துகொள்கிறேன்” என கூறியுள்ளார்.

மேலும் ”ரசிகர்கள் பட்ஜெட் ஹோட்டலைப் பெறுவதற்கு நிறைய சிரமங்களைத் தாங்க வேண்டியிருந்தது. அதிகப்படியான முன்பதிவு காரணமாக ஸ்டேடியத்திற்கு அருகிலேயே நாங்கள் தங்கியிருந்தோம். எங்களுடைய காத்திருப்பிற்கு இந்த தோல்வி எங்களுக்கு அதிக வேதனையை கொடுத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

வழக்கமாகவே வங்கதேச ரசிகர்கள் உணர்ச்சியை அளவுகடந்து வெளிப்படுத்தக் கூடியவர்கள். அது மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, விரக்தியாக இருந்தாலும் சரி. அவர்கள் மிகுந்த நாட்டுப்பற்று உடையவர்கள். இருப்பினும் விளையாட்டில் வரும் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் என்பது முக்கியமானது. வங்கதேச அணியும் பல சிறப்பாக வெற்றியை கடந்த சில ஆண்டுகளாக பெற்றுதான் வருகிறது. இந்த உலகக்கோப்பை அவர்களுக்கு சுத்தமாக எடுபடவில்லை. இருப்பினும் சர்வதேச அளவிலான தரமான வீரர்களும் வங்கதேச அணியில் இருக்கவே செய்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com