391 போட்டிகள், 25 சதங்கள், 15,249 ரன்கள்.. ஓய்வை அறிவித்தார் வங்கதேச மூத்த வீரர் தமீம் இக்பால்!
தொடக்க வீரர், மிடில் ஆர்டர் என எந்த இடங்களில் களமிறங்கினாலும் வங்கதேச அணிக்காக உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர் மூத்த வீரரான தமீம் இக்பால். அதிரடியான ஆட்டம் மற்றும் நிதானமான ஆட்டம் என இரண்டையும் கொண்டிருக்கும் தமீம் இக்பால், மூன்று வடிவிலான கிரிக்கெட் ஃபார்மேட்களிலும் வெற்றிகரமான வங்கதேச வீரராக மாறினார்.
2007-ம் ஆண்டு அறிமுகமாகி முதல் டெஸ்ட் போட்டியிலேயே 53 ரன்கள், 84 ரன்கள் என அசத்திய தமீம் இக்பால், இதுவரை 70 டெஸ்ட், 243 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடி 15,249 ரன்களை குவித்துள்ளார். அதில் 25 சர்வதேச சதங்களும் அடங்கும்.
இந்நிலையில் தன்னுடைய 17 வருட கிரிக்கெட் பயணத்திற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தமீம் இக்பால்.
அணியில் எந்த குழப்பமும் வேண்டாம்..
கடந்த 2023-ம் ஆண்டே அணியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் ஓய்வை அறிவித்திருந்தார் இக்பால். ஆனால் அப்போதைய பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க அடுத்த 24 மணி நேரத்திற்குள் தன்னுடைய முடிவை திரும்ப பெற்றார். இந்தமுறை முழுவதுமாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஓய்வை அறிவித்துள்ளார்.
2023 ஒருநாள் உலகக்கோப்பையில் வங்கதேச அணியில் இடம் கிடைக்காததற்குபிறகு, அணியில் பங்கேற்காமல் இருந்துவந்த இக்பால் சாம்பியன்ஸ் டிரோபிக்கு அணிக்கு திரும்புவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. தற்போதைய கேப்டன் மற்றும் வங்கதேசம் நிர்வாகம் அவரின் இருப்பை விரும்புவதாக கூறப்பட்ட நிலையில், அணியில் எந்தவிதமான குழப்பமும் ஏற்படாமல் இருக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக இக்பால் தெரிவித்துள்ளார்.
ஓய்வு குறித்து பேசியிருக்கும் இக்பால், “கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ என்னை அணிக்குத் திரும்பும்படி உண்மையாகக் கேட்டுக் கொண்டார். தேர்வுக் குழுவுடனும் என்னுடைய கம்பேக் குறித்த விவாதங்கள் நடந்தன. ஒரு வருட காலமாக கிரிக்கெட் விளையாடாத என்னை இன்னும் அணியில் பரிசீலித்ததற்காக அவர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இருப்பினும், எனக்கான நேரம் முடிவுக்கு வந்துவிட்டது. இதற்கு முன்னரும் நானாகவேதான் ஓய்வை அறிவித்திருந்தேன், அணிக்குள் தேவையற்ற விவாதம் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து நானே என்னை நீக்கிக்கொண்டேன்" என்று கூறியுள்ளார்.