பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மட்டுமில்லாமல், ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகவும் ஜொலித்துவந்த பாபர் அசாம், 2023 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய சரிவுக்கு பிறகு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.
2023 ஒருநாள் உலகக்கோப்பையில் மோசமாக செயல்பட்ட பாகிஸ்தான் அணி லீக் சுற்றோடு வெளியேறியது, அப்போது கேப்டனாக இருந்த பாபர் அசாம் சகவீரர்களுடன் கோபமாக பேசியதாகவும், அதனால் வீரர்கள் சொல்லாமல்கொள்ளாமல் இந்தியாவை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் கசிந்தன.
அதற்குபிறகு கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டு, புதிய கேப்டன்களாக டெஸ்ட் அணிக்கு ஷாத் ஷகீலும், டி20 அணிக்கு ஷாஹீன் அப்ரிடியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் தொடர் தோல்வி காரணமாக மீண்டும் ஷாஹீன் அப்ரிடியிடமிருந்த கேப்டன்சி பொறுப்பு பாபர் அசாமிடம் வந்தது.
ஆனால் பாபர் அசாம் தலைமையில் 2024 டி20 உலகக்கோப்பைக்கு சென்ற பாகிஸ்தான் அணி, இந்தியாவுடன் வெற்றிபெற வேண்டிய இடத்திலிருந்து தோற்றது மட்டுமில்லாமல், அமெரிக்காவுக்கு எதிராக வரலாற்று தோல்வியையும் சந்தித்து தோல்வி முகத்துடன் நாடுதிரும்பியது.
இதற்கிடையில் கேப்டன்சி மாற்றங்கள், சர்ச்சை சம்பவங்கள், மோசமான தோல்விகள் என அனைத்தின் எதிரொலியாக பாபர் அசாம் ஒரு பேட்ஸ்மேனாக மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளார். சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியில், பாபர் அசாம் ஒருவீரராக அணியை காப்பாற்ற தவறிவிட்டார். அவர் 4 இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 64 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.
விராட் கோலியுடன் ஒப்பிடப்பட்ட ஒருவீரர் தொடர்ந்து தோல்விமுகத்துடன் செயல்பட்டுவருவது முன்னாள் பாகிஸ்தான் வீரர்களிடம் கவலையை ஏற்படுத்திய நிலையில், தற்போது சாம்பியன்ஸ் ஒருநாள் கோப்பையில் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளை விரட்டி தன்னுடைய பழைய ஃபார்மை மீட்டு எடுத்துவரும் முயற்சியில் இறங்கியுள்ளார் பாபர் அசாம்.
சாம்பியன்ஸ் ஒருநாள் கோப்பை போட்டியில் மார்க்கோர்ஸ் மற்றும் ஸ்டாலியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் விளையாடிய மார்க்கோர்ஸ் அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
232 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய ஸ்டாலியன்ஸ் அணியில் 13 ரன்னுக்கு 1 விக்கெட் இருந்தபோது பாபர் அசாம் களமிறங்கினார். அவர் 10 பந்துகளில் 5 ரன்களில் இருந்தபோது, தஹானி வீசிய ஒரே ஓவரில் 5 பவுண்டரிகளை விரட்டி பிரமிக்க வைத்தார். முதல் பந்து டாட் பந்தாக மாறிய நிலையில், டைமிங்கில் மிரட்டிய பாபர் அசாம் ஒன்றன்பின் ஒன்றாக 5 பவுண்டரிகளை கிரவுண்ட்டின் நாலாபுறமும் சிதறடித்தார்.
பாபர் அசாம் 45 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் அவுட்டாகி வெளியேறிய பிறகு ஸ்டாலியன்ஸ் அணி பேரழிவை சந்தித்தது. அதற்குபிறகு களத்திற்கு வந்த ஒருவீரர் கூட சோபிக்காத நிலையில் 105 ரன்களுக்கே அந்த அணி ஆட்டமிழந்தது. 126 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.