2025 ஆசியக்கோப்பை| ’20 பந்தில் அரைசதம்..’ முறியடிக்கப்பட்ட சூர்யகுமார் சாதனை! ஆப்கான் வீரர் வரலாறு!
2025 ஆசியக்கோப்பை தொடர் டி20 வடிவத்தில் நடைபெறுகிறது
முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதின
ஆசியக்கோப்பை டி20 வரலாற்றில் அதிவேக அரைசதமடித்தார் அஸ்மதுல்லா ஓமர்சாய்
2025 ஆசிய கோப்பை தொடரானது டி20 வடிவத்தில் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறகிறது. மொத்தம் 19 போட்டிகள் துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடைபெற உள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஹாங்ஹாங், ஓமன் முதலிய 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் முதலிய அணிகள் ஏ பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் முதலிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் 2025 ஆசியக்கோப்பை தொடரின் முதல் போட்டி நேற்று இரவு ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
அதிவேகமாக அரைசதமடித்த ஓமர்சாய்..
சமீபகாலத்தில் டி20 வடிவத்தில் தங்களுடைய ஆட்டத்தை மெருகேற்றியிருக்கும் ஒரு அணி என்றால் அது ஆப்கானிஸ்தான் மட்டுமே. டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு பிறகு அதிக (61%) வெற்றி சதவீதத்தை வைத்திருக்கும் ஒரே ஆசிய அணியும் ஆப்கானிஸ்தான் மட்டுமே.
கடந்த ஒரு வருடத்தில் 24 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி 13 போட்டிகளில் வென்றுள்ளது. சமீபத்தில் நடந்துமுடிந்த முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான், யுஏஇ இரண்டு அணிகளையும் வீழ்த்தி ஃபார்மை தொடர்ந்து வருகிறது ஆப்கானிஸ்தான் அணி.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆசியக்கோப்பை போட்டியில் ஹாங்காங்கை எதிர்கொண்டு விளையாடியது. அபுதாபியில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 188 ரன்களை சேர்த்தது. தொடக்க வீரராக களமிறங்கிய செடிகுல்லா அடல் 73 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க, 6வது வீரராக களமிறங்கிய ஆல்ரவுண்டர் அஸ்மதுல்லா ஓமர்சாய் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 20 பந்தில் அரைசதமடித்து அசத்தினார். அதில் 5 சிச்கர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும்.
இதன்மூலம் ஆசியக்கோப்பை டி20 வரலாற்றில் அதிவேக அரைசதமடித்த சூர்யகுமார் யாதவின் (22 பந்துகள்) சாதனையை முறியடித்தார் ஓமர்சாய். அதுமட்டுமில்லாமல் டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்காக அதிவேகமாக அரைசதமடித்த வீரராகவும் மாறி சாதனை படைத்தார்.
189 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஹாங்காங் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 94 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை சந்தித்தது. 94 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவுசெய்தது ஆப்கானிஸ்தான் அணி.