“பேர்ஸ்டோவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம்”- நக்கலாக ட்வீட் செய்த ஆஸ்திரேலிய போக்குவரத்து துறை!

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு மாநிலமான விக்டோரியா போக்குவரத்து காவல்துறை, ஜார்னி பேர்ஸ்டோவின் ரன் அவுட்டை எடுத்துக்காட்டாக வைத்து போக்குவரத்து விதிமீறலை பற்றி தெரிந்து கொள்ளுமாறு நகைச்சுவையாக கூறியுள்ளது.
Bairstow Run Out
Bairstow Run OutTwitter

2023ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதல் போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து, இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் முனைப்பில் விளையாடியது இங்கிலாந்து அணி. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, வெற்றிபெற இங்கிலாந்துக்கு 371 ரன்கள் நிர்ணயித்தது. கடினமான ஒரு இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடியது.

bairstow
bairstowptweb

என்ன தான் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தாலும், 5ஆவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பென் டக்கெட் இருவரும் சிறப்பாக விளையாடி போட்டியை விறுவிறுப்பாக மாற்றினர். 132 ரன்கள் பார்ட்னர்ஷிப்பிற்கு பிறகு இந்த கூட்டணியை ஹெசல்வுட் பிரித்தார்.

பின்னர் இணைந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இருவரும் போட்டியை அடுத்த நகர்வுக்கு எடுத்துச்செல்வதில் மும்முரமாக இருந்தனர். அப்பொழுது தான் அந்த சர்ச்சைக்குரிய விக்கெட்டை ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி நிகழ்த்தி காட்டினார். பின்னர் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. இந்நிலையில் ஜானி பேர்ஸ்டோ அவுட் ஆன விதம் கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.

சர்ச்சைக்குரிய வகையில் வழங்கப்பட்ட விக்கெட்!

க்ரீன் வீசிய 51 ஆவது ஓவரில் இறுதிப் பந்தை அடிக்காமல் பேர்ஸ்டோ குனிந்து கொண்டார். பந்து ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சென்றது. அப்போது ஓவர் முடிந்தவிட்டதே என்று பேர்ஸ்டோ உடனடியாக கிரீஸை விட்டு வெளியேறி பென்ஸ்டோக்ஸை நோக்கி சென்றார். எந்த ஒரு பேட்டரும் தன் அருகில் இருக்கும் ஸ்லிப் வீரரையோ, விக்கெட் கீப்பரையோ அல்லது அம்பயரையோ பார்த்து விட்டே செல்வர். ஆனால் பேர்ஸ்டோ எதையும் செய்யாமல் சாதாரணாக நடந்து சென்றார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அலெக்ஸ் கேரி உடனடியாக பந்தை ஸ்டெம்ப் நோக்கி வீசினார். பந்து ஸ்டெம்பில் பட்டதும் ஆஸ்திரேலிய வீரர்கள் நடுவரிடம் அவுட்டிற்காக முறையிட்டனர். ஆஸ்திரேலிய அணியின் இந்த அணுகுமுறையை எதிர்ப்பார்க்காத பேர்ஸ்டோ அதிர்ச்சிக்குள்ளானார். முடிவு மூன்றாம் நடுவருக்கு செல்ல, அவர் பேர்ஸ்டோ அவுட் என அறிவித்தார்.

நடுவரின் இந்த அறிவிப்பு இங்கிலாந்து வீரர்களிடையேயும் ரசிகர்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் ட்விட்டரில் பேர்ஸ்டோ அவுட் ஆன காணொளியை பதிவிட்டு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸும், “ஓவர் முடிந்துவிட்டது என அம்பயர் அறிவிக்காத போது, அது அவுட் என்பதை மறுக்க முடியாது தான். ஆனால் இப்படி ஒரு விக்கெட்டை பெற வேண்டாம் என்பது தான் என்னுடைய கருத்து” என்று கூறியிருந்தார்.

ஜானி பேர்ஸ்டோ விக்கெட்டை டிரோல் செய்த ஆஸ்திரேலிய காவல்துறை!

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் போக்குவரத்து காவல்துறை பேர்ஸ்டோவின் சர்ச்சைக்குரிய ரன் அவுட்டை வைத்து ஒரு ட்ரோல் பதிவை ட்வீட் செய்துள்ளது. அதில் “சிக்னலில் பச்சை விளக்கு வழங்கப்படுவதற்கு முன்பாக, நீங்கள் கிரீஸைக் கடந்து சென்றால் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் என்பதைப் பற்றி அனைவருக்கும் நினைவூட்டியதற்காக ஜானி பேர்ஸ்டோவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்” என்று கலாய்த்து ட்வீட் செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், எங்களின் சாலைப் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளைப் பாருங்கள் என்று தங்களுடைய போக்குவரத்து விதிமுறைகளுக்கான வெப்சைட் லிங்கை பகிர்ந்திருக்கும் ஆஸ்திரேலிய போக்குவரத்து போலீஸ், லண்டன் போக்குவரத்து துறையையும் டேக் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com