'ஆஸ்திரேலியா கரகாட்டக்காரன்..' Fans உருவாக்கிய புதிய எடிட்டுக்கு ரியாக்ட் செய்த வார்னர்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், ரசிகர்கள் உருவாக்கிய 'கரகாட்டக்காரன்' பாடல் எடிட்டை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்திய ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த வார்னர், தமிழ் பாடல்களிலும், இந்திய பண்டிகைகளிலும் தனது பங்கேற்பால் பிரபலமாகி வருகிறார்.
40 வயதாகும் ஆஸ்திரேலியாவின் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேன டேவிட் வார்னர், ஆஸ்திரேலியா அணிக்காக 2015 ஒருநாள் உலகக்கோப்பை, 2021 டி20 உலகக்கோப்பை ( தொடர்நாயகன் விருது), 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஒருநாள் உலகக்கோப்பை என 4 ஐசிசி கோப்பைகளை வென்றவர் ஆவார்.
ஐபிஎல்லிலும் ஒரு லெஜெண்டாக திகழ்ந்த அவர் வீரராக 184 இன்னிங்ஸ்களில் விளையாடி 6565 ரன்களை குவித்துள்ளார். அதில் 4 சதங்களும், 62 அரைசதங்களும் அடங்கும். அதுமட்டுமில்லாமல் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிக்கு கோப்பை வென்றுக் கொடுத்த ஒரே கேப்டனாகும் விளங்குகிறார்.
இந்தசூழலில் தான் சர்வதேச கிரிக்கெட்டை கடந்து ஐபிஎல்லில் இந்திய ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த டேவிட் வார்னர், தெலுங்கு திரைப்பட பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து இன்னும் நெருக்கமாக தன்னை மாற்றிக்கொண்டார். அல்லு அர்ஜுன் பாடல்களை குடும்பத்துடன் ரீல்ஸ் செய்தும், புஷ்பா படத்தின் ஸ்டைலை பின்பற்றி போஸ் கொடுப்பதும், இந்திய பண்டிகைகளுக்கான உடையில் வந்து போஸ்ட் போடுவதும் என தொடர்ந்து இந்திய மக்களின் நெருக்கமான கிரிக்கெட் வீரராக டேவிட் வார்னர் வலம்வருகிறார்.
இந்நிலையில் எப்போதெல்லாம் ஒரு சினிமா பாடல் வைரலாகிறதோ அப்போதெல்லாம் டேவிட் வார்னரின் முகத்தை வைத்து எடிட் செய்வதை ரசிகர்கள் வாடிக்கையாக வைத்துவருகின்றனர். டேவிட் வார்னரும் அதை ரசித்து தன்னுடைய சமூகவலைதளங்களில் பகிர்ந்துவருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் வைரலான ஜெயிலர் 2 படத்தின் அல்ல பலேலோ பாடலில் டேவிட் வார்னர் ஆடுவது போல ரசிகர்கள் எடிட் செய்து வைரலாக்கினர். அதை தன்னுடைய சமூகவலைதளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை தெரிவித்தார் வார்னர். தற்போது இளையராஜா இசையில், ராமராஜன் நடிப்பில் மிகப்பெரிய ஹிட்டடித்த கரகாட்டக்காரன் திரைப்படத்தின் பாடலில் வார்னர் ஆடுவது போல ரசிகர் ஒருவர் எடிட் செய்துள்ளார். ’ஆஸ்திரேலியாக்காரன்’ என தலைப்பிடப்பட்ட அந்தவீடியோவில் வார்னரை மென்சன் செய்து பலர் கருத்திட்டிருந்த நிலையில், அதைப்பார்த்த வார்னர் தன்னுடைய எக்ஸ்தளப்பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

