சொந்த மண்ணிலேயே இலங்கை ஒயிட்வாஷ்.. 14 வருடங்களுக்கு பிறகு சாதனை படைத்த ஆஸ்திரேலியா!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இலங்கையின் காலி ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், உஸ்மான் கவாஜா 232 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 141 ரன்கள் மற்றும் ஜோஸ் இங்கிலீஷ் 102 ரன்கள் என மூன்று ஆஸ்திரேலியா வீரர்கள் சதமடித்து அசத்த 654/6 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா அணி, இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்னில் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 06-ம் தேதிமுதல் தொடங்கி நடைபெற்றது.
2-0 தொடரை வென்றது ஆஸ்திரேலியா..
பரபரப்பாக தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 257 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியாவின் குஹ்னேமன், நாதன் லயன் மற்றும் ஸ்டார்க் மூன்றுபேரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இலங்கையில் அதிகபட்சமாக சண்டிமால் 74, குசால் மெண்டீஸ் 85 ரன்கள் அடித்தனர்.
இலங்கையை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்களும், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 156 ரன்களும் அடித்து அசத்த 414 ரன்களை குவித்தது. சிறப்பாக பந்துவீசிய இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா 11வது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய இலங்கை அணி 231 ரன்களில் சுருண்டது. பின்னர் எளிதான இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை வென்று சாதனை படைத்தது. தொடர் நாயகனாக ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணி சிறப்பாக விளையாடும் என்ற எதிப்பார்ப்பு இருந்த நிலையில், சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆகி அதிர்ச்சி கொடுத்துள்ளது இலங்கை.
14 ஆண்டுகளுக்கு பின் வரலாறு படைத்த ஆஸி..
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என ஒயிட்வாஷ் செய்து வென்ற ஆஸ்திரேலியா, 2011-ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.
கடைசியாக இலங்கை மண்ணில் 2011-ஆம் ஆண்டு விளையாடிய ரிக்கி பாண்டிங்கின் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
அதற்கு பிறகு ஸ்டீவ் ஸ்மித்தின் தலைமையிலான ஆஸ்திரேலியா 2016-ல் 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷை சந்தித்தது. பின்னர் 2022 தொடரானது 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. 14 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் ஒரு வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது ஆஸ்திரேலியா.