99 பவுண்டரிகள்.. 12 சிக்சர்கள்.. 781 ரன்கள்! கவனம்பெற்ற IND vs AUS ஒருநாள் போட்டி!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் வரும் செப்டம்பர் 30-ம் தேதிமுதல் தொடங்கி நடைபெறவிருக்கிறது.
அதற்கு முன்னதாக இந்தியாவிற்கு வந்திருக்கும் ஆஸ்திரேலியா மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 282 ரன்கள் இலக்கை 44.1 ஓவரில் சேஸ் செய்த ஆஸ்திரேலியா வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது.
2வது ஒருநாள் போட்டியில் கம்பேக் கொடுத்த இந்திய அணி ஆஸ்திரேலியாவை 102 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாற்று தோல்வியை பரிசளித்தது. 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்பது இதுவே முதல்முறை.
இந்நிலையில் தொடரை நிர்ணயிக்கும் 3வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கி நடைபெற்றது.
2-1 என தொடரை வென்றது ஆஸ்திரேலியா..
பரபரப்பாக தொடங்கிய 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில், அனைத்து வீரர்களும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ஜார்ஜியா 81 ரன்னிலும், எல்லிஸ் பெர்ரி 68 ரன்னிலும் வெளியேற, 4வது வீராங்கனையாக களமிறங்கிய பெத் மூனி 23 பவுண்டரிகள் 1 சிக்சர் என துவம்சம் செய்து 138 ரன்கள் குவித்து அசத்தினார். அதுமட்டுமில்லாமல் 57 பந்தில் சதம் விளாசி இந்திய பவுலிங்கை சிதறடித்தார். அவரின் அதிரடியால் 412 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய மகளிர் அணி.. மொத்தமாக 60 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் விளாசியது ஆஸ்திரேலியா..
413 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனா ஆஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 50 பந்தில் சதம் விளாசிய மிரட்டிய மந்தனா 63 பந்தில் 17 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 125 ரன்கள் அடித்து அசத்தினார். அவருக்குபிறகு வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 34 பந்தில் அரைசதமடித்து அசத்த இந்திய அணி 23 ஓவரில் 230 ரன்களை குவித்து வலுவான நிலையில் இருந்தது.
ஆனால் அடுத்தடுத்து மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் இருவரும் அவுட்டாக இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு பறிபோனது. இறுதிவரை போராடிய தீப்தி ஷர்மா 72 ரன்கள் அடித்தாலும், இந்திய அணி 369 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது. முடிவில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.
இரண்டு அணிகளும் மொத்தமாக சேர்த்து 99 பவுண்டரிகளும் 12 சிக்சர்களும் 781 ரன்களும் குவித்து அசத்தின. உலகக்கோப்பைக்கு முன்னதாக சிறந்த மோதலை இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பதிவுசெய்துள்ளன.